உக்ரைன் காதலருக்கு இந்து முறைப்படி இறுதிச் சடங்கு செய்தார் ரஷ்ய தோழி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

வாரணாசி: உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் கோஸ்டியான்டைன் பெலியேவ். கடந்த சில ஆண்டுகளாக அவர் உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் தங்கியிருந்தார். இந்து மதத்தின் மீது தீவிர பற்று கொண்ட அவர் காவி உடையணிந்து சாதுவை போன்று வாழ்ந்தார். தனது பெயரை கிருபா பாபா என்று மாற்றிக் கொண்டார். வடமாநிலங்களில் பல்வேறு மடங்கள், புனித தலங்களுக்கு சென்று பூஜை, வழிபாடுகளை நடத்தி வந்தார்.

இதனிடையே இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்த ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் கிருபா பாபாவுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இருவரும் உத்தர பிரதேசம் வாரணாசியின் பெலுப்பூர், நாரத் காட் பகுதியிலுள்ள விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தனர்.

கடந்த 25-ம் தேதி ரஷ்ய பெண் விடுதியில் இருந்து வெளியே சென்றார். கிருபா பாபா மட்டும் விடுதி அறையில் தங்கியிருந்தார். கடந்த 26-ம் தேதி அவரது அறைக் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்தபோது கிருபா பாபா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து வாரணாசி போலீஸார் கூறியதாவது. உக்ரைனில் வசிக்கும் கிருபா பாபா தாயாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் குடும்ப உறுப்பினர்கள் பலர் உயிரிழந்திருப்பதால், அதனால் ஏற்பட்ட சோகத்தில் கிருபா பாபா தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று அவரது தாயார் கூறினார்.

விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ரஷ்ய பெண்ணிடம் விசாரணை நடத்தினோம். அவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. கிருபா பாபாவின் நம்பிக்கையின்படி இந்து முறைப்படி அவரது இறுதிச் சடங்குகளை நடத்த ரஷ்ய பெண் விரும்பினார். இதன்படி கடந்த 29-ம் தேதி ரஷ்ய பெண்ணின் முன்னிலையில் ஹரிஷ்சந்த் படித்துறையில் இந்து முறைப்படி இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. இவ்வாறு போலீஸார் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in