Published : 02 Jan 2023 08:12 AM
Last Updated : 02 Jan 2023 08:12 AM
சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் அடல் சுரங்கப் பாதை அருகே 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இமாச்சல பிரதேசத்தில் மணாலி - லே நெடுஞ்சாலையில் உள்ள ரோத்தங் கணவாயில் உலகின் மீக நீளமாக அடல் சுரங்கப் பாதை உள்ளது. இந்நிலையில் மணாலி - லே நெடுஞ்சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலை வழுக்கத் தொடங்கியதால் அடல் சுரங்கப் பாதையின் தென் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித்தவித்தனர்.
இதையடுத்து கீலாங் மற்றும் மணாலியில் இருந்து போலீஸ் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன. 10 முதல் 12 மணி நேர மீட்புப் பணி நேற்று அதிகாலை 4 மணிக்கு முடிவுக்கு வந்தது.
“அனைத்து பயணிகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு விட்டன. காரை மிகுந்த கவனமுடன் ஓட்டிச் செல்லுமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது” என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். பனிப்பொழிவு குறைந்த பிறகு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT