Published : 31 Dec 2016 05:52 PM
Last Updated : 31 Dec 2016 05:52 PM

பணமதிப்பு நீக்கத்தையும் பிரிட்டன் பணம் அச்சடிக்கும் நிறுவனத்தையும் தொடர்பு படுத்தும் உம்மன் சாண்டி

2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் கறுப்புப் பட்டியலில் சேர்த்த பிரிட்டன் நோட்டு அச்சடிக்கும் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் எழுந்துள்ளது எப்படி என்று கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு இதற்கு உரிய விளக்கம் அளிக்கவும் அவர் வலியுறுத்துகிறார்.

இது குறித்து அவர் ஆவணங்களுடன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது:

1997-98-ல் ரூ. 1 லட்சம் கோடி மதிப்புள்ள சுமார் 360 கோடி ரூ.500 மற்றும் ரூ.100 தாள்களை அச்சடிக்க மத்திய ரிசர்வ் வங்கி ஒப்பந்தம் செய்த 3 அயல்நாட்டு நிறுவனங்களில் ஒன்று பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் டி லா ரியூ என்ற நிறுவனமாகும். இந்த நிறுவனத்தை 2011-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் கறுப்புப் பட்டியலில் சேர்த்தது.

இந்நிலையில் 2012-13-ல் காங்கிரஸ் தலைவர் ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற பொது விவகார குழு அறிக்கை ஒன்றில் 1997-98-ல் ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதற்கு அயல்நாட்டு அச்சடிக்கும் நிறுவனங்களை ஆர்பிஐ ஒப்பந்தம் செய்வது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தது. அதாவது இதனால் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள் மற்றும் பிற பொருளாதாரக் குற்றமிழைப்பவர்கள் கையில் நோட்டுகள் சென்றடையும் ரிஸ்க் இருப்பதாக அந்த கமிட்டி கூறியிருந்தது.

2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் ஆண்டுவாரி அறிக்கையில் பிளாக்லிஸ்ட் செய்யப்பட்ட டி லா ரியூ நடவடிக்கைகள் குறித்து குறிப்பிடப்படவில்லை, ஆனால் 2016-ம் ஆண்டு அறிக்கையில் டி லா ரியூவின் இந்திய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கேஷ் புரோசசிங் சொல்யுஷன்ஸ் இந்தியா (பி) லிட், டி லா ரியூ இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பெயர்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

டி லா ரியூ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி மார்டின் சதர்லேண்ட் சமீபத்தில் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் டெல்லியில் அலுவலகம் அமைத்துள்ளதாகவும், மத்திய அரசின் தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறையுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் பிரதமரின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் தங்கள் நிறுவனம் ஆற்றவிருக்கும் பங்கு பற்றியும் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஏப்ரல் 11, 2016-க்குப் பிறகு 33.33% அதிகரித்ததற்கும் ஆதாரங்கள் உள்ளன.

கடந்த நவம்பரில் டெல்லியில் நடைபெற்ற இந்தியா-யு.கே உச்சிமாநாட்டில் பிளாட்டினம் பார்ட்னர்களில் ஒன்றாக இந்த நிறுவனம் இருந்துள்ளது. மேலும் மத்திய நிதி இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வல் டிசம்பர் 9, 2016 அன்று நாடாளுமன்றத்தில் பிளாஸ்டிக் கரன்சி அச்சடிக்கும் நடவடிக்கை அயல்நாட்டு நிறுவனத்தில் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நான் கேட்பதெல்லாம், முன்பு மத்திய உள்துறை அமைச்சகத்தினால் தடை செய்யப்பட்ட நோட்டு அச்சடிக்கும் நிறுவனத்துடன் நடப்பு அரசுக்கான தொடர்பு, உறவுகள் எத்தகையது என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நாடாளுமன்ற குழு அயல்நாட்டில் பணம் அச்சடிக்கும் நடைமுறையை கடுமையாக கண்டித்துள்ள நிலையில் பிளாஸ்டிக் பணம் அச்சடிப்பதற்காக அந்தப் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லையா?

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்துடன் தொடர்பு இல்லை என்று மத்திய அரசு மறுக்குமானால் அந்த நிறுவனம் முழு அளவில் மீண்டும் இந்தியாவில் எழுந்துள்ளது குறித்து விசாரணை நடத்துமா?

ஊடகங்கள் இந்த விவகாரத்தை மேலும் விசாரிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் உம்மன் சாண்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x