

சண்டிகர்: ஹரியாணா மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மீது தடகள விளையாட்டு பெண் பயிற்சியாளர் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் அளித்துள்ள விளக்கத்தில், "எனது பிம்பத்தை கெடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. அந்தப் புகார் தொடர்பாக நேர்மையான விசாரணை நடத்தப்படும் என்று நம்புகிறேன். அதனால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்ட பெண்ணோ பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி அதில் அமைச்சர் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார். அப்பெண் ஹரியாணா எதிர்க்கட்சியான இந்திய தேசிய லோக் தள கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் சந்தீப் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அவர் மீது மாநில அரசு சிறப்பு புலனாய்வு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார். கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் நவம்பர் வரை சமூக வலைதளங்கள் வாயிலாக தன்னை அமைச்சர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்றும் நேரிலும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஹரியாணா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபீந்தர் சிங் ஹூடா கோரியுள்ளார்.
அமைச்சர் தன்னை இன்ஸ்டாகிராம் வாயிலாக தொடர்பு கொண்டதாக அப்பெண் தனது புகாரில் கூறியுள்ளார். தனது சான்றிதழ்கள் தொடர்பாக பேசுவதற்காக அமைச்சர் தன்னை அவரது வீட்டுக்கு அழைத்ததாகவும் அங்கே சென்றபோதுதான் அவர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறினார் என்றும் புகாரில் அவர் கூறியுள்ளார்.
பாலியல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் சந்தீப் சிங், குருஷேத்ராவின் பெஹோவா தொகுதி எம்எல்ஏ ஆவார். அவர் தொழில்முறை ஹாக்கி வீரரும் ஆவார். இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் ஆளும் பாஜகவும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.