

பெங்களூருவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் தினமும் இரவில் பெண்களைப் போல சேலைக் கட்டிக்கொள்வதால், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றார்.
பெங்களூருவில் உள்ள கோரமங்களா பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 29 வயதான இவர் அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு அனிதா, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில் அனிதா பெங்களூருவில் உள்ள இந்திரா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “எனது கணவர் திருமணமான முதல் நாள் இரவே பெண்களைப் போல சேலை அணிந்துகொண்டு உறங்கினார்.
மறுநாள் பகலில் மற்ற ஆண்களைப் போல பேண்ட், சட்டை அணிந்துகொண்டு அலுவலகம் சென்றார். பகலில் ஆண்களின் உடையும், இரவில் பெண்களில் உடையும் அணிவதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் எனக்கும் அவருக்கும் பலமுறை சண்டை நடந்துள்ளது. எனது கணவர் தன் பாலின சேர்க்கையில் நாட்டம் கொண்டுள்ளதாக என்னிடமே தெரிவித்தார். எனவே அவரிடம் இருந்து என்னைப் பிரித்து விடுங்கள்” என்று கூறியிருந்தார்.
மனநல ஆலோசனை
இதையடுத்து போலீஸார் அங்குள்ள வனிதா மகளிர் உதவி மையத்திற்கு இருவரையும் அனுப்பி மனநல ஆலோசனை வழங்கினர். அப்போது ராஜேஷ் தான் பெண்ணாக மாற விரும்புவதாகவும் தனது மனைவி தன்னைவிட்டுப் பிரிந்துசெல்ல அனுமதிப்பதாகவும் கூறினார். இதையடுத்து இருவரும் முழு மனதுடன் பிரிந்து செல்ல போலீஸார் அனுமதித்ததாக வனிதா மகளிர் உதவி மையம் தெரிவித்துள்ளது.