Published : 01 Jan 2023 05:39 AM
Last Updated : 01 Jan 2023 05:39 AM
புதுடெல்லி: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் தனது 100-வது வயதில் நேற்றுமுன்தினம் காலமானார். டெல்லியில் இருந்து வந்த பிரதமர் மோடி, வட்நகரில் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு பணிக்கு திரும்பினார்.
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் நாட்டின் 7-வது வந்தே பாரத் ரயிலை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாயார் இறந்த நிலையிலும், உடனடியாக பிரதமர் பணிக்கு திரும்பியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்நிலையில், கடந்த 1989-ம் ஆண்டு பிரதமர் மோடியின் தந்தை தாமோதர்தாஸ் மூல்சந்த் மோடி காலமானார். அப்போது பிரதமர் மோடியின் செயல்பாட்டை விஎச்பி பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி நினைவுகூர்ந்துள்ளார்.
இதுகுறித்து திலீப் நேற்று கூறியதாவது: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1989-ம் ஆண்டு பாஜக.வின் முக்கிய கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதுதான், மோடியின் தந்தை இறந்துவிட்டார் என்று எங்களுக்கு தகவல் வந்தது. அவர் உடனடியாக வட்நகர் சென்றார். அதன்பிறகு அவர் கட்சி கூட்டத்துக்கு வரும் சூழ்நிலை இருக்காது. அவர் வரமாட்டார் என்றுதான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம்.
ஆனால், தந்தையின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு, பிற்பகல் கட்சி கூட்டத்துக்கு மோடி வந்துவிட்டார். அவரைப் பார்த்து கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டோம். கட்சி கூட்டம் முடிந்த பிறகு, தந்தை இறந்த சூழ்நிலையில் கூட்டத்துக்கு வந்ததுகுறித்து மோடியிடம் நான் பேசினேன்.
அதற்கு அவர், ‘‘தந்தையின்இறுதிச் சடங்கை செய்ய வேண்டியது கடமை. அதுபோல் கட்சியில்எனது பொறுப்புகளை முழுமையாக செய்ய வேண்டியதும் என்கடமை. அவர் சொன்ன வார்த்தைகள் எங்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் ஊக்கமளிக்கும் தருணமாக இருந்தது. நமது பொறுப்புகள், கடமைகளை செய்வதற்கு அர்ப்பணிப்பு உணர்வு வேண்டும் என்பதை கற்றுக் கொண்டோம். இவ்வாறு விஎச்பி பொதுச் செயலாளர் திலீப் திரிவேதி நினைவுகூர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT