

திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் பதவியில் இருந்து பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். வருமான வரி சோதனையில் சிக்கியதை அடுத்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இரு தினங் களாக நடந்த இந்த சோதனையில் ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கம், 179 கிலோ தங்கம் ஆகியவை சிக்கின.
மேலும் நேற்று காலை அவரது காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.24 கோடி ரொக்கத்தையும் வருமான வரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் அவர் வகித்து வந்த உறுப்பினர் பதவியை பறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் அவரது உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.
இதற்கிடையில், சேகர் ரெட்டியிடம் இவ்வளவு கறுப்புப் பணம் எப்படி வந்தது? இவை யாருடையது? இவருக்கு பின்னால் இருக்கும் நபர்கள் யார்? கறுப்புப் பணத்தை மாற்ற தேவஸ்தான அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனரா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்துடன், இவரது பணமும் மாற்றப்பட்டதா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் சேகர் ரெட்டியுடன் நெருக்கமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.