Published : 29 Dec 2022 06:11 PM
Last Updated : 29 Dec 2022 06:11 PM

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலியான விவகாரம்: இந்திய மருந்து உற்பத்தித் துறை குறித்து வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி

புதுடெல்லி: இந்திய மருந்து உற்பத்தித் துறை நம்பிக்கையானது என்று வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை அருந்தியதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த 18 குழந்தைகள் பலியானதாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: ''இந்திய மருந்து உற்பத்தித் துறை உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மருந்துகளையும் மருந்து பொருட்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது. நமது நாட்டின் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் நம்பத்தகுந்தவை.

உஸ்பெகிஸ்தான் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதை நாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கிறோம். இதை எளிதாக கடந்து செல்ல விரும்பவில்லை. 2 மாத காலத்தில் 18 குழந்தைகள் இறந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 18 குழந்தைகள் இறந்ததற்கு இந்திய இருமல் மருந்துதான் காரணமா என்பது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த உயிரிழப்பு தொடர்பாக உஸ்பெகிஸ்தான் அரசு இதுவரை அதிகாரபூர்வமாக நம்மிடம் பேசவில்லை. எனினும், உஸ்பெகிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் விசாரணை குறித்த விவரங்களை நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம். நமது நாட்டின் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த 27-ம் தேதி முதல், உஸ்பெகிஸ்தானின் தேசிய மருந்து கண்காணிப்பகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.

செய்தித்தாளில் வந்த புகாரை அடுத்து நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திற்கு அதிகாரிகள் சென்று ஆய்வை மேற்கொண்டனர். அங்கிருந்து இருமல் மருந்துகளை எடுத்து வந்து ஆய்வுக்காக அனுப்பி உள்ளனர்'' என்று அரிந்தம் பக்சி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x