

சிபிஐக்கு நிரந்தர இயக்குநரை நியமிக்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
நாட்டின் முக்கிய விசாரணை அமைப்பான சிபிஐயின் இயக்குநராக பதவி வகித்த அனில் சின்ஹா கடந்த டிசம்பர் 2-ம் தேதி ஓய்வுபெற்றார். இவருக்குப் பதிலாக புதிய இயக்குநரை தேர்வு செய்யாமல் இடைக்கால இயக்குநராக ராகேஷ் அஸ்தானா மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். 1984-ம் ஆண்டு பேட்ச், குஜராத் மாநில பிரிவின் ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிபிஐயில் மூன்றாம் இடத்தில் இருந்தார். கடைசி நேரத்தில் இவர் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டு, இடைக்கால இயக்குநராக பணியமர்த்தப்பட்டார்.
இதனால், அவரது நியமனத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அஸ்தானா, குஜராத் மாநில கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக இருந்ததும் இதற்கு காரணம் ஆகும். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசு விளக்கம் அளிக்க கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது. இந்த வழக்கின் மூலம் மத்திய அரசின் விதிமீறல் வெளிப்படும் வாய்ப்புகள் தெரிந்தன. இதற்கு அஞ்சிய மத்திய அரசு, நிரந்தர இயக்குநரை உடனே தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கி விட்டது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “சிபிஐக்கு நிரந்தர இயக்குநரை அமர்த்தும் பணிக்கான உத்தரவு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எங்களுக்கு இன்று (நேற்று) வந்துள்ளது. இதையொட்டி கொலீஜியம் முன் வைப்பதற்காக மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக அனுப்பி விட்டோம். இடைக்கால இயக்குநர் நியமனத்தை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே இந்தப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகக் கருதுகிறோம்” என்று தெரிவித்தனர்.
கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக சிபிஐக்கு தற்போது இடைக்கால இயக்குநர் அமர்த் தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனைக்கும் புதிய இயக்குநரை தேர்ந்தெடுப்பதற்கான பட்டியல் தயாரான பின்பும் அதற்கான கொலீஜியம் கூட்டப்படாமல் இருந்தது விதிமீறல் எனவும் புகார் எழுந்தது. இதை குறிப்பிட்டு கொலீஜியத்தின் உறுப்பினரான, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சில நாட்களுக்கு முன் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில் கொலீஜியம் கூட்டப்படும் தேதி மற்றும் அதில் சமர்ப்பிக்கப்பட உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலையும் அனுப்பி வைக்குமாறு அவர் கேட்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கொலீஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் அனுப்பப்படும் நீதிபதியும் அமர்ந்து முடிவு எடுக்க உள்ளனர். 2 ஆண்டு பதவிக்காலம் கொண்ட புதிய இயக்குநருக்கான அறிவிப்பு, இந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியாகும் என என எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ச்சனாவுக்கு வாய்ப்பு
மத்திய உள்துறை அமைச்சக வட்டாரத்தில் ‘தி இந்து’வுக்கு கிடைத்த தகவலின்படி அப்பட்டியலில், தமிழக பிரிவின் 1980-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் தற்போது எல்லை ஆயுதப் படையின் (சஷாஸ்திரா சீமா பல் எஸ்எஸ்பி) தலைமை இயக்குநராக பதவி வகிக்கிறார்.
1979 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியும் டெல்லி காவல்துறை ஆணையருமான அலோக் வர்மா, இந்தோ திபெத் எல்லை காவல் படையின் தலைமை இயக்குநராக பதவி வகிக்கும் 1979-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி கிருஷ்ணா சவுத்ரி, மகராஷ்டிர மாநில காவல்துறை இயக்குநராக பதவி வகிக்கும் 1981-ம் ஆண்டு பேட்ச் அதிகாரி சதீஷ் மாத்தூர் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இவர்களில், வர்மா தவிர மற்ற மூன்று அதிகாரிகளும் ஏற்கெனவே சிபிஐயில் பணியாற்றியவர்கள் ஆவர். இத்துடன் முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியின் பெயரும் சிபிஐ இயக்குநர் பதவிக்கு தற்போது பரிசீலிக்கப்படுகிறது.