

எதிரிகளைச் சமாளிக்க இந்திய விமானப் படைக்கு கூடுதலாக 250 ரபேல் விமானங்கள் தேவை என அதன் தளபதி அரூப் ராகா தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதியுடன் தளபதி பதவியில் இருந்து அரூப் ராகா ஓய்வு பெறுகிறார். நிருபர்களுக்கு நேற்று அவர் பேட்டியளித்த போது கூறியதாவது:
விவிஐபிக்களுக்கான ஹெலிகாப்டர் பேர ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் அது ராணுவத்துக்கோ அல்லது அதில் ஈடுபட்டவர்களுக்கோதான் அவப்பெயர். ஹெலிகாப்டர் கொள்முதலில் ராணுவ படைகள் மட்டுமே ஈடுபடவில்லை. நிறைய முகமைகள் அதில் ஈடுபட்டன. எனவே இந்த ஊழலுக்கு ஒரு அமைப்பை மட்டுமே குற்றம்சாட்டக் கூடாது. முன்னாள் விமானப்படை தளபதி எங்களது குடும்ப உறுப்பினர் போன்றவர். இந்த இக்கட்டான நிலையில் நாங்கள் அவருக்கு உறுதுணையாக இருப்போம்.
ஒருவேளை அவர் ஊழலில் ஈடுபட்டது நிரூபணமானால், அப்போது அவர் மீது எந்த கருணையும் காட்ட மாட்டோம். தற்போது இந்திய விமானப்படையிடம் உள்ள தேஜாஸ், சுகோய் ரக போர் விமானங்கள் மூலம் அடுத்த 40 ஆண்டுகள் வரை எதிரிகளைச் சமாளிக்க முடியும். ஆனால் மத்திய ரக போர் விமானமான ரபேல் தான் போதிய அளவில் இல்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு எதிரிகளைச் சமாளிக்க வேண்டுமெனில் 200 முதல் 250 ரபேல் விமானங்கள் தேவைப்படுகிறது. இவ்வாறு ராகா கூறினார்.