நெல்லூர், ஸ்ரீகாளஹஸ்தி உட்பட பல இடங்களில் பலத்த சூறாவளி: ஆந்திராவிலும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நெல்லூர், ஸ்ரீகாளஹஸ்தி உட்பட பல இடங்களில் பலத்த சூறாவளி: ஆந்திராவிலும் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Updated on
1 min read

‘வார்தா’ புயல் ஆந்திராவையும் புரட்டி போட்டது. ராயலசீமா மாவட்டங்களில் ‘வார்தா’ புயலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வார்தா புயல் சென்னையை மட்டுமின்றி ஆந்திராவையும் புரட்டி போட்டது. ’ஹூத் ஹூத்’ புயலுக்கு விசாகப்பட்டினம் பாதிக்கப்பட்டதை போன்று, தற்போது ‘வார்தா’ புயலுக்கு கடலோர ஆந்திரா, மற்றும் ராயலசீமா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

வார்தா புயலையொட்டி நேற்று அதிகாலை முதலே ஆந்திராவின் ஓங்கோல், நெல்லூர் ஆகிய கடலோர மாவட்டங்கள், மற்றும் ராயலசீமா பகுதியில் உள்ள சித்தூர், கடப்பா, கர்னூல், அனந்தபூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் புயல் காற்றும் மழையும் கொட்டி மக்களை அச்சுறுத்தியது.

வார்தா புயல் நேற்று மாலை கரையை கடந்த போது நெல்லூர் மாவட்டம் தடா, சூலூர்பேட்டை, நாயுடு பேட்டை, நெல்லூர் மற்றும் காளஹஸ்தி, வரதய்ய பாளையம், கேவிபி புரம் ஆகிய இடங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் இப்பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன.

பெயர் பலகைகள், பேனர்கள் காற்றில் பறந்தன. சாலைகளில் போலீஸார் வைத்துள்ள இரும்பு தடுப்பு கம்பிகள் காற்றில் இழுத்து செல்லப்பட்டன.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் கம்பங்கள் விழுந்தன.

புயல் கரையை கடந்தபோது சுமார் 80 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் வெளிச்சம் குறைந்ததால் வாகனங்கள் விளக்கு வெளிச் சங்களில் ஊர்ந்து சென்றன.

திருப்பதி, திருமலையில் நேற்று காலை முதலே பலத்த காற்றுடன் மழை பெய்து வந்ததால், சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் காட்சியளித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in