தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு: நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

தமிழகத்துக்கு தண்ணீர் தர கர்நாடக விவசாயிகள் எதிர்ப்பு: நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
Updated on
1 min read

கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதைக் கண்டித்து மைசூரில் உள்ள நீர்ப்பாசனத்துறை தலைமை அலுவலகத்தை கர்நாடக விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

கேரள மாநிலம் வயநாட்டை சுற்றியுள்ள பகுதியில் கடந்த இருவாரங்களாக பலத்த மழை பெய்து வருவதால், மைசூரில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதையடுத்து கடந்த 19-ம் தேதி முதல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தண்ணீர் திறந்து விட்டதற்கு மைசூர், மாண்டியா மாவட்டங்களில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனை பொருட்படுத்தாமல் கர்நாடக நீர்ப்பாசனத்துறை தொடர்ந்து கபினியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டு வருகிறது. கபினி நீர் பிலிகுண்டுலு வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்தது.

இந்நிலையில் தண்ணீரை திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கபினி அணை பாதுகாப்பு குழு மற்றும் கபினி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மைசூரில் உள்ள கர்நாடக நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து நீர்ப்பாசனத்துறை அதிகாரியை சந்தித்த போராட்டக்காரர்கள், கபினி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை உடனடியாக நிறுத்து மாறு மனு அளித்தனர். அங்கிருந்து மைசூர் அரண்மனை வரை ஊர்வலமாகச் சென்ற விவசாயிகள், அரண்மனைக்கு எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே போராட்டத்தை தலைமையேற்று நடத்திய கபினி நீர்ப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சாந்தகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. கர்நாடக விவசாயிகளுக்கு தீங்கிழைத்துவிட்டு தமிழ்நாட்டிற்கு தண்ணீரை திறந்து விடக்கூடாது.

கபினி அணை இன்னும் முழுமையாக நிரம்பவில்லை. இந்நிலையில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்னும் 3 நாட்களுக்குள் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தாவிடில், மைசூர், மாண்டியா, ராம்நகர், பெங்களூர் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

கூடுதலாக நீர் திறக்க வாய்ப்பு

திங்கள்கிழமை மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 6000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 நாட்களும் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழகத்திற்கு கூடுதலாக நீர் திறக்க வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.​

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in