

உத்தரப் பிரதேச மாநிலம் சஹரான்பூரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு ஊரடங்கு உத்தரவும் கண்டதும் சுடும் உத்தரவும் தொடர்ந்து அமலில் உள்ளன.
சஹரான்பூரில் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில் சீக்கியர்களின் குருத்வாரா உள்ளது. இதன் அருகில் உள்ள காலி இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று குருத்வாரா நிர்வாகிகளும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று மற்றொரு தரப்பினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் குருத் வாரா நிர்வாகிகள் சுவர் எழுப்ப முயன்ற தாகக் கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை கலவரம் வெடித்தது. இதில் 3 பேர் பலியாயினர். போலீஸார் உட்பட 33-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அந்தப் பகுதியில் மாநில போலீஸாரும் அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவும் கண்டதும் சுடும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு தொடர்ந்து அமலில் உள்ளன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தியா திவாரி நிருபர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறும்போது, ‘நகரில் சட்டம், ஒழுங்கு நிலைமை சீராகிவருகிறது. அசம்பாவித சம்பவங் கள் எதுவும் நடைபெறவில்லை. சர்ச்சைக்குரிய பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. வன்முறைச் சம்பவம் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 38 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட் டுள்ளார்.
இதுகுறித்து அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் பேசியபோது, ‘இந்தச் சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு காரணமானவர்கள் தப்பிக்க முடியாது’ என்று எச்சரித்தார்.
அரசியல் மோதல்
சஹரான்பூர் கலவரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைத் தொடங்கியுள்ளது. ஆளும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராஜேந்திர சவுத்ரி கூறும்போது, ‘மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க சில சக்திகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. வகுப்புவாதத்தையும் சமூகவிரோத செயல்களையும் உத்தரப் பிரதேசத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் ஷாநவாஸ் ஹுசைன் கூறியபோது, சமாஜ்வாதி கட்சிக்கு ஆளும் திறமை இல்லை. திறமையற்ற ஆட்சியால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது, அந்தக் கட்சி வாக்கு வங்கி அரசியல் நடத்தி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ரீட்டா பகுகுணா கூறியபோது, இந்தப் பிரச்சினையில் நீதிமன்றம் தெளிவான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று தெரிவித் துள்ளார்.