

மகாராஷ்டிரத்திலிருந்து பிரித்து தனியாக விதர்பா மாநிலம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான விலாஸ் முத்தெம்வார் புதன்கிழமை வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் உள்ள விவரம் வருமாறு:
தனி விதர்பா மாநிலம் அமைப்போம் என பாஜக உறுதி கூறி இருந்தது. அந்த வாக்குறுதியை சட்டசபை தேர்தலுக்கு முன் நிறைவேற்ற பாஜக தலைமையிலான மத்திய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
1996ம் ஆண்டில் புவனேசுவரத்தில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் புதிய மாநிலங்கள் தொடர்பான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. அதை நிறைவேற்ற வேண்டும். 2000த்தில் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தபோது சத்தீஸ்கர், உத்தரகண்ட், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் உருவானது. ஆனால், தான் வாக்குறுதி கொடுத்திருந்தபோதிலும் அதை நிறைவேற்றாமல் விதர்பா தனி மாநில கோரிக்கையை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது, இது விதர்பா மக்களுக்கு இழைத்த நம்பிக்கை துரோகமாகும். தனி விதர்பா மாநிலமே அனைத்துப் பிரிவினரின் எதிர்பார்ப்பு ஆகும்.
விதர்பா பிராந்தியத்தில் உள்ள நாக்பூர், அமராவதி, சந்திராபூர், யாவத்மால் ஆகிய நகரங்களில் அண்மையில் சில சமூக அமைப்புகள் மக்களின் கருத்தறியும் வாக்குப் பதிவு நடத்தின. தனி விதர்பா மாநில கோரிக்கையை ஆதரித்து 97 சதவீதம் பேர் பதிவு செய்தனர். மேலும் பெரும்பாலான கட்சிகள், அவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து சமிதி உறுப்பினர்கள் தனி விதர்பா மாநில கோரிக்கையை ஆதரிக்கின்றனர்.
இவ்வாறு அந்த கடிதத்தில் முத்தெம்வார் வலியுறுத்தி உள்ளார்.