

மதுரா: மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் மசூதி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஆய்வு மேற்கொள்ள மதுரா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ணர் பிறந்த இடத்தில் 13.37 ஏக்கர் பரப்பளவில் அவருக்கு ஆலயம் அமைக்கப்பட்டிருந்ததாகவும், முகலாய மன்னர் அவுரங்கசீப் அந்த கோயிலை இடித்துவிட்டு அங்கு சாஹி இட்கா மசூதியை கட்டியதாகவும் கூறி இந்து சேனா அமைப்பு சார்பில் கடந்த 8ம் தேதி வழக்கு தொடரப்பட்டது. இந்து சேனா அமைப்பின் தலைவர் விஷ்ணு குப்தாவும், துணைத் தலைவர் சுர்ஜித் சிங் யாதவும் இந்த வழக்கை தொடுத்திருந்தனர்.
வழக்கை விசாரித்த மதுரா சிவில் நீதிமன்ற மூத்த நீதிபதி சோனிகா வெர்மா, இது குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார். வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் அந்த மசூதி கோயிலை இடித்து கட்டப்பட்டதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே போன்ற ஒரு உத்தரவு இந்த வழக்கிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜன்மஸ்தான் சேவா சங்கத்திற்கும், சாஹி இட்கா மசூதி நிர்வாகத்திற்கும் இடையே 1968ல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்றும் இந்து சேனா கோரியுள்ளது. நாடு சுதந்திரம் பெற்ற தினத்திற்கு முன்பு இருந்த வழிபாட்டு கட்டுமானங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டால் அது செல்லாது என 1991ம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் சட்டம் இயற்றப்பட்டது. சாஹி இட்கா மசூதி நாடு சுதந்திரம் அடைந்ததற்கு முன்பு கட்டப்பட்டது என்பதால் இந்த வழக்கில் மசூதிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.