தலைநகரில் ஒற்றுமை யாத்திரை: ராகுலுடன், சோனியா, பிரியங்கா பங்கேற்பு

தலைநகரில் ஒற்றுமை யாத்திரை: ராகுலுடன், சோனியா, பிரியங்கா பங்கேற்பு
Updated on
2 min read

புதுடெல்லி: ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை சனிக்கிழமை காலை டெல்லியை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டனர்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களைக் கடந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளது. இந்த யாத்திரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

டெல்லிக்குள் நுழைந்த யாத்திரையில் ராகுல் காந்தியுடன் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, பூபேந்திர சிங் ஹூடா, குமாரி செல்ஜா, ரன்தீப் சுர்ஜவாலா உள்ளிட்டவர்களுடன் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். பின்னர், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரும் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் இணைந்து நடந்தனர். சோனியா காந்தி இரண்டாவது முறையாக இந்திய ஒற்றுமை யாத்திரையில் கலந்து கொள்கிறார். முன்னதாக அக்டோபர் மாதம் கர்நாடகாவில் நடந்த யாத்திரையில் அவர் கலந்து கொண்டார்.

ஃபரிதாபாதிலிருந்து டெல்லிக்குள் யாத்திரை நுழைந்த போது, டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்திரி, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியை வரவேற்றனர். அப்போது தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடையே பேசிய ராகுல் காந்தி," நாட்டின் சாமானிய மக்கள் தற்போது அன்பை பற்றி பேசத் தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கான மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டனர். நான் ஆர்எஸ்எஸ், பாஜகவினருக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் வெறுப்பின் சந்தையில் அன்பின் கடையைத் திறந்துள்ளோம்.

இந்த யாத்திரையின் நோக்கமே, மக்கள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் உண்மையான இந்தியாவை எடுத்துக்காட்டுவதுதான். அவர்கள் வெறுப்பை பரப்புகிறார்கள். நாம் அன்பை பறப்புகிறோம்" என்றார்.

முன்னதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா வழிகாட்டு நெறிகளை கடைபிடிக்க முடியாவிட்டால், தேச நலன்கருதி யாத்திரையை நிறுத்தி விடுங்கள் என்று ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்திருந்த ராகுல் காந்தி, கரோனா பரவல் என்பது யாத்திரையை நிறுத்துவதற்கான ஒரு காரணம் மட்டுமே. அவர்கள் (பாஜக) பல்வேறு மாநிலங்களில் யாத்திரை நடத்துகிறார்கள். ஆனால் சுகாாதரத்துறை அமைச்சர் நமக்கு மட்டும் தான் கடிதம் எழுகிறார் என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் யாத்திரையை முன்னிட்டு டெல்லி போக்குவரத்து காவல்துறையினர், பதர்பூர் முதல் செங்கோட்டை வரையிலான பாதையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் சில பாதைகளை தவிர்க்குமாறு முடிந்த வரையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட ஒற்றுமை யாத்திரை: சனிக்கிழமை டெல்லிக்குள் நுழைந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை காலை 8.30 மணியளவில் டெல்லி அப்பல்லோ மருத்துவமனை அருகே வந்தது.அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கடந்து செல்வதற்காக அவர் தனது யாத்திரையை சிறிது நேரம் நிறுத்தினார். அதேபோல பின்தொடர்ந்து வரும் தொண்டர்களையும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டு நிற்குமாறு கேட்டுக்கொண்டார். பரத்பூரில் இருந்து தொடங்கிய இன்றைய யாத்திரை, 23 கிமீ பயணித்து மாலை செங்கோட்டையை அடைந்ததும் நிறைவடையும். பின்னர் 9 நாட்கள் ஓய்வுக்கு பிறகு ஜனவரி 3 ஆம் தேதி மீண்டும் டெல்லியில் இருந்து யாத்திரை தொடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in