

புதுடெல்லி: சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் RT-PCR எனப்படும் கரோனா பரிசோதனையை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். பரிசோதனையில் கரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஏர் சுவிதா சான்றிதழ் கட்டாயம்: இதனிடையே, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள், தங்களின் உடல்நிலை குறித்து தாங்களே சான்றளிக்கும் ஏர் சுவிதா விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள், தொடர்பு எண்கள், சமீபத்தில் மேற்கொண்ட பயண விவரங்கள், உடல்நிலை குறித்த விவரங்கள் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். இந்தியா வரும் வெளிநாட்டுப் பணிகளால் கரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்: கரோனா தொற்று நோயாளிகளுக்குத் தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் வாயு போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறைகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத்துறைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி இன்று கடிதம் எழுதி உள்ளார். அதில், கரோனா நோயாளிகளுக்கு அத்தியாவசியத் தேவையாக மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பதால், அவற்றின் இருப்பு போதுமான அளவு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும், அவற்றின் விநியோக நடைமுறை சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.