வருமான வரி சோதனைக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு: மம்தா பானர்ஜி எதிர்ப்பு

வருமான வரி சோதனைக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு: மம்தா பானர்ஜி எதிர்ப்பு
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் வருமான வரித் துறை சோதனைக்கு சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) பாதுகாப்பு வழங்குவதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அவர் எழுதிய கடிதத்தில், “வருமான வரித் துறை சோதனைக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு அளிக்கும் முடிவு நாட்டின் அரசியல் சாசனம், சட்டத்திட்டங்கள் மற்றும் கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமானது. மத்தியப் படை எதுவாகிலும் மாநில அரசு கேட்டுக்கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியும்.

வருமான வரித் துறை சோதனைக்கு மத்தியப் படை பாதுகாப்பு அளிக்கும் முடிவை உடனே திரும்பப் பெறவேண்டும். மத்திய அரசுத் துறைகளின் எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் கோரிக்கையின் பேரில் தேவையான பாதுகாப்பை மாநில அரசும் காவல் துறையும் வழங்கத் தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் நகலை அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் அனுப்பியுள்ளார்.

அதிகாரி விளக்கம்

இந்நிலையில் மம்தாவின் ஆட்சேபம் குறித்து கொல்கத்தாவில் வருமான வரித் துறை உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “சோதனை நடவடிக்கையில் துணை ராணுவப் படைகள், சுங்கத் துறை, பொதுத்துறை வங்கிகள் மற்றும் சிஐஎஸ்எப் உதவியை நாங்கள் சட்டப்படி பெறமுடியும். சிஆர்பிஎப் உதவியை பெற்றது புதிதல்ல” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in