

புதுடெல்லி: கரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020 ஏப்ரல் முதல் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 5 கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் இம்மாதம் முடிவடைகிறது. இதை மேலும் நீட்டிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி முடிவு எடுப்பார். இத்திட்டத்துக்கு கடந்த 28 மாதங்களில் மத்திய அரசு ரூ.1.80 லட்சம் கோடி செலவிட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் பிற நலத் திட்டங்களின் கீழ் தேவைகளைப் பூர்த்திசெய்ய போதுமான உணவு தானியங்கள் அரசிடம் கையிருப்பு உள்ளன. பொது விநியோகத் திட்டம் மற்றும் நலத்திட்டங்களுக்கு உணவு தானியங்கள் கொள்முதல் செய்யும் பணி சீராக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.