

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைக்கு புதிய வகை ஸ்கேனர் கருவி விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் பயணிகளின் சிரமம் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீப ஆண்டுகளாக விமான நிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் 20-ம் தேதி நிலவரப்படி நாட்டின் விமான நிலையங்களில் தினமும் சுமார் 4.21 லட்சம் பயணிகள் கூடுகின்றனர். இது அவற்றின் கொள்ளளவை விட மிக அதிகம் ஆகும்.
உள்நாடு மற்றும் சர்வதேச விமானப் பயணிகள் தங்கள் பயணத்துக்கு முன் மத்திய பாதுகாப்பு படையின் ‘செக்யூரிட்டி செக்’ எனும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுவது அவசியமாகும். இந்தவகை சோதனையில் இருமுனைஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கைப்பேசிகள், லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை ஸ்கேனர் உள்ளே செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.
இவற்றை பயணிகள் தங்கள் பைகளிலிருந்து வெளியே எடுத்து ஸ்கேனரை நோக்கி நகரும் பிளாஸ்டிக் தட்டுக்களில் வைக்க வேண்டும். இத்துடன் பணப்பை, பெல்ட், கோட், காலணிகள் மற்றும் குளிருக்கான ஜாக்கெட்டையும் கழற்றி தனி தட்டில் வைக்க வேண்டும்.
இடையில் மற்றொரு பயணி தனது பொருட்களை வைத்துவிடுவதால் பொருட்கள் இடம் மாறுவதும் அதனால் ஏற்படும் கால விரயத்தால் விமானத்தை தவறவிடுவதும் அடிக்கடி நிகழ்கிறது.
இந்த சோதனையை கடக்க வயதானவர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். எனினும் ஆபத்தான பொருட்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு விடும் என்பதால் இந்த வகை சோதனை அவசியமாகியுள்ளது.
இந்நிலையில் பயணிகளை சிரமங்களை தவிர்க்க மத்திய விமானப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு (பிசிஏஎஸ்), மும்முனை ஸ்கேனர்களை விரைவில் அமைக்க உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில விமான நிலையங்களில் இவை புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த ஸ்கேனரை இந்தியாவில் முதல்முறையாக டெல்லி, மும்பை, பெங்களூரூ மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களில் பிசிஏஎஸ் அமைக்க உள்ளது.
இதுகுறித்து பிசிஏஎஸ் இணை இயக்குநர் ஜெய்தீப் பிரசாத் கூறும்போது, “இந்த மும்முனை ஸ்கேனர் சோதனையால் பாதுகாப்பு அதிகரிக்கும். பயணிகள் மின்னணு சாதனங்களை தங்கள் பைகளில் இருந்து வெளியே எடுக்கும் சிரமம் இருக்காது” என்றார்.
டெல்லி சர்வதேச விமானநிலையத்தில் சமீப காலமாகசோதனையில் பல இன்னல்களைபயணிகள் சந்திக்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் புகார்கள் குவிந்தன. இதன் தாக்கமாகவும் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.