Published : 23 Dec 2022 05:03 AM
Last Updated : 23 Dec 2022 05:03 AM

நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாயத்தினரை பழங்குடியினர் (எஸ்.டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து இதற்கான அரசியல் சாசன(எஸ்.டி) மசோதா (2-வது திருத்தம்), 2022-ஐ மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா மக்களவையில் கடந்த 15-ம் தேதி தாக்கல் செய்துநிறைவேற்றினார். இதையடுத்து,இந்த மசோதா மாநிலங்களவையில் நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

இதன் மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா பேசும்போது, "நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமுதாயத்தினர் மிகக் குறைந்த அளவில் உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இவர்கள் தங்களது உரிமைகளை பெறாமல் கஷ்டங்களை சந்தித்தனர். பழங்குடியினர் நலனுக்காக செயல்படும் மத்திய அரசு, இந்த முரண்பாடுகளை அகற்றி அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்துள்ளது" என்றார்.

இந்த விவாதத்தில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை பேசும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள வால்மீகி, வடுகர், குரும்பர் இனத்தைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மீன்பிடிப்பது கடலில் வேட்டையாடுவது போன்றதுதான். அதனால் மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x