ஆர்பிஎஃப் மேற்பார்வை அதிகாரிகளுக்கும் ஊதிய உயர்வு வழங்கிடுக: ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎஃப்) அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி, மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி, விதி 377-ன் கீழ் எழுப்பினார்.

இது குறித்து விழுப்புரம் மக்களவை தொகுதி எம்பியான டி.ரவிகுமார் பேசியதாவது: "ரயில்வே அமைச்சர் கடந்த நவம்பர் 16-ம் தேதி காணொலிக் காட்சி மூலம் பேசினார்.அப்போது அவர், இந்திய ரயில்வேயின் அனைத்து மேற்பார்வை ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியம் ரூ.4,600 என்பதை ரூ.4,800/- முதல் 5400 வரை உயர்த்தி வழங்கப்படும் என்று திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், இந்தத் தொகை ரயில்வே பாதுகாப்புப் படையான ஆர்பிஎஃப் மேற்பார்வை அதிகாரிகள் அனைவருக்கும் வழங்கப்படவில்லை. ஆர்பிஎஃப்-ன் சில துறைகள் மட்டும் இந்த ஊதிய உயர்வைப் பெற்றுள்ளன,மற்றவை இதுவரை பெறவில்லை.

இப்படி பாரபட்சம் காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் வகுக்கப்பட்ட சமத்துவ விதியை மீறுவதாகும். ஆய்வாளர் பதவி என்பது ரயில்வே பாதுகாப்புப் படைக்கு இன்றியமையாதது. ரயில்வே அமைப்பின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்காக அவர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர்.

அவர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை என்பதுடன், ஊதிய உயர்வு வழங்குவதிலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.அமைச்சர் உறுதியளித்தபடி ஊதிய உயர்வு நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தால் பதவி உயர்வு கிடைக்காததால் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு அது சிறு நிவாரணத்தை அளித்திருக்கும்.இந்திய ரயில்வேயில் பதவி உயர்வுகள் தேக்கமடைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

சரியான நேரத்தில் பதவி உயர்வுகள் இல்லாததால், இந்திய ரயில்வே ஊழியர்களிடம் மனச்சோர்வு ஏற்பட்டு அது அவர்கள் பணி செய்வதிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆர்பிஎஃப் சட்டம் 1957 பிரிவு 10-ன் படி, அதன் பணியாளர்கள் ரயில்வே ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள். மேலும், மேலே குறிப்பிடப்பட்ட ஊதிய உயர்வு ஆர்பிஎஃப் மேற்பார்வை அதிகாரிகளுக்கும் பொருந்தும். இதைக் கருத்தில் கொண்டு, அவர்களது ஊதியக் கட்டமைப்பை மேம்படுத்தி, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in