

மும்பை: புதிய இந்தியாவின் தந்தை நரேந்திர மோடி என்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ருதா ஃபட்னாவிஸ் புகழாரம் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ஆதரவாளராக இருக்கும் அம்ருதா, கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும்போது, அவரை 'தேசத் தந்தை நரேந்திர மோடி' என குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், "நமது நாடு இரண்டு தேசத் தந்தைகளைக் கொண்டிருக்கிறது. புதிய இந்தியாவின் தேசத் தந்தை நரேந்திர மோடி. முந்தைய காலத்தின் தேசத் தந்தை மகாத்மா காந்தி" என அம்ருதா தற்போது கூறி இருப்பதாக மராத்தி செய்தி இணையதளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் யஷோமதி தாகூர், "பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்கள் மகாத்மா காந்தியை மீண்டும் மீண்டும் கொலை செய்ய முயல்கிறார்கள். பொய்களைத் திரும்பத் திரும்பச் சொல்லி மகாத்மா காந்தி போன்ற மாபெரும் தலைவர்களை கேவலப்படுத்துவதன் மூலம் வரலாற்றை மாற்ற அவர்கள் தீவிரமாக முயல்கிறார்கள்" என விமர்சித்துள்ளார்.
மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியை மகாராஷ்ட்டிர ஆளுநர் கோஷியாரி அவமதித்துவிட்டதாகவும், ஆளும் பாஜக கூட்டணி அரசு அதனை வேடிக்கைப் பார்ப்பதாகவும் மகாராஷ்டிர எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், நரேந்திர மோடி குறித்த அம்ருதா ஃபட்னாவிஸின் கருத்து திசை திருப்பும் நோக்கம் கொண்டது என விமர்சிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது குறித்து நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்ருதா, தான் அரசியல்வாதி அல்ல என்றும் அரசியல் ரீதியாக இக்கருத்தை சொல்லவில்லை என்றும் விளக்கம் அளித்திருக்கிறார். தனது கருத்துகளுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களைக் கண்டு தான் பயப்படுவதில்லை என தெரிவித்துள்ள அம்ருதா ஃபட்னாவிஸ், தனது அம்மாவுக்கும் மாமியாருக்கும் மட்டுமே தான் பயப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.