Published : 21 Dec 2022 10:41 AM
Last Updated : 21 Dec 2022 10:41 AM
புதுடெல்லி: "கரோனா தற்காப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவ்வாறு முறையாக பின்பற்றுவது சாத்தியப்படாவிட்டால் இந்திய ஒற்றுமை யாத்திரையை உடனடியாக நிறுத்தவும்" என்று ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எழுதிய கடிதத்தில், "இந்திய ஒற்றுமை யாத்திரையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். அவ்வாறு பின்பற்ற இயலாவிட்டால் இந்திய ஒற்றுமை யாத்திரையை பொது சுகாதாரம் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் யாத்திரையை நிறைவு செய்து தற்போது ராஜஸ்தானில் யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இந்த யாத்திரை 100 நாட்களைக் கடந்துள்ளது. ராகுல் காந்திக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகிவருகிறது. இந்த யாத்திரையில் விளையாட்டு பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எனப் பலரும் பங்கேற்றனர். தமிகழத்திலிருந்து நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் ராகுல் யாத்திரையில் பங்கேற்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய அரசு ராகுல் காந்தி யாத்திரைக்கு கெடுபிடி விதித்துள்ளது.
மாநிலங்களுக்கு கடிதம்: முன்னதாக நேற்று மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், "சீனா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறித்த அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ள நிலையில், கரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும்" என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
“ஜப்பான், அமெரிக்கா, கொரியா, பிரேசில் மற்றும் சீனா போன்ற நாடுகளில் திடீரென கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு நோய்த்தொற்று பரிசோதனையை தீவிரப்படுத்துவது அவசியம். நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து மரபணு சார்ந்த ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியம்.
இந்த நடவடிக்கை மூலம் புதிய கரோனா திரிபு பாதிப்பு நாட்டில் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலும், அதற்குத் தேவையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும்” என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா தொற்றில் ஏற்படும் மரபணு சார்ந்த மாறுபாடுகளை கண்டறிய 50-க்கும் மேற்பட்ட ஆய்வகங்களை உள்ளடக்கிய INSACOG அமைப்பு இயங்கி வருகிறது. இந்த ஆய்வகங்கள் கரோனா திரிபு குறித்த விவரங்களை கண்காணிக்கும் பணியை ஆய்வின் ஊடாக செய்து வருகிறது.
கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மாதிரிகள் தினந்தோறும் இந்த ஆய்வகங்களுக்கு அவசியம் அனுப்ப வேண்டும் என மத்திய அரசு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது 3,490 பேர் கரோனா தொற்று பதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா கவலை: சீனாவில் ஏற்பட்டுள்ள கரோனா பரவலின் தீவிரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் பேசும்போது, “சினாவின் பொருளாதாரத்தைக் கருத்தில் கொண்டால், அங்கு தற்போது ஏற்பட்டுள்ள கரோனா பரவலின் தீவிரம் உலக நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. கரோனா வைரஸ்கள் உருமாற்றம் அடையக் கூடியவை. எனினும், இதனை சீனா சிறப்பாக கையாளும் என்று நம்புகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் சீனா வலுவாக இருக்க வேண்டும் என்பது சீனாவுக்கு மட்டும் நல்லதல்ல, உலக நாடுகளுக்கும் நல்லது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT