

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி மத்திய சிறையில் இருக்கும் நிழல் உலக தாதா, 51 வயது பப்லு ஸ்ரீவாத்சவாவுக்கு, மற்றொரு தாதா தாவூத் இப்ராஹிம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து பரேலி சிறை அதிகாரிக்கு பப்லு புகார் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், “பாகிஸ்தானில் ஒளிந்தி ருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் என் மீதுள்ள விரோதம் காரணமாக என்னை கொல்லத் திட்டமிட்டுள்ளார். நீதிமன்ற விசாரணக்காக நான் சிறையில் இருந்து வெளியே வரும் போது, தாவூத் தனது ஆட்கள் மூலம் என்னை கொன்று விடுவார் என அஞ்சுகிறேன். எனவே நீதிமன்ற விசாரணைகளை சிறையிலேயே வீடியோ கான்பரன்ஸிங் முறையில் நடத்த வேண்டும்” என்று கூறி யுள்ளார்.
யார் இந்த பப்லு?
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் லக்னோ பல்கலைக்கழக மாணவராக இருந்த ‘பப்லு’ எனும் ஓம் பிரகாஷ் ஸ்ரீவாத்சவாவுக்கு உ.பி.யின் சில அரசியல்வாதிகளிடம் ஏற்பட்ட நெருக்கம், ஆள்கடத்தல், கொலை, கொள்ளைகளிலும் ஈடுபாட்டை வளர்த்து, கிரிமினல் எனப் பெயர் எடுக்க காரணமானது. பிறகு சர்வதேச கிரிமினலாக மாறிய பப்லு, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டத்தில் சேர்ந்து, அவரது நம்பிக்கைக்குரிய ஆட்களில் ஒருவராக ஆனதாக கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் சிக்கிய பப்லு
இந்தியா மட்டுமன்றி, நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் பப்லு கிரிமினல் வழக்குகளில் சிக்கியதால், இண்டர் போல் போலீஸாரும் அவரை தேடி வந்தனர். கடந்த 1995-ல் சிங்கப்பூரில் சிக்கிய இவர், சிபிஐ மூலம் இந்தியா கொண்டுவரப்பட்டார். தற்போது பரேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பப்லு மீது லக்னோ, கான்பூர் மற்றும் டெல்லி நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையில், இவற்றில் ஆஜராகி வருகிறார். இந்நிலையில் தாவூத் ஆட்களால் தான் கொல்லப்படலாம் என பப்லு அஞ்சுகிறார்.
உ.பி. அரசு ஆலோசனை
பரேலி சிறை அதிகாரிக்கு பப்லு எழுதிய கடிதத்தை தொடர்ந்து அவருக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பப்லுவின் விசாரணையை சிறையி லேயே நடத்துவது குறித்தும் உபி அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
பரபரப்பை ஏற்படுத்துபவர்
ஏதாவது செய்து மக்களிடையே அடிக்கடி பரபரப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2002-ல் உ.பி. சட்டமன்ற தேர்த லிலும், 2004-ல் நாடாளுமன்ற தேர்தலிலும் ஜெயிலில் இருந்த படியே போட்டி யிட்டார் பப்லு. பிறகு, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சந்திராசாமிக்கும் தொடர்பு உண்டு எனவும், தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில்தான் ஒளிந்திருகிறார் எனவும் கூறி சர்சையைக் கிளப்பினார் பப்லு. இதில், தாவூத் பற்றி கூறியது உண்மை எனத் தெரியவந்தது.
நிறைவேறாத கனவு
கடந்த அக்டோபர் 2005-ல் பப்லு ஸ்ரீவாத்சவா ஹிந்தியில் எழுதிய 'அதூரா காஃப்' என்ற புத்தகம் பெரும் பரபரப்பை உருவாக்கியது. இதில், ஹவாலாவில் பணம் எப்படி கை மாறுகிறது? போலி பாஸ்போர்ட்டுகள் எப்படி விற்பனை செய்யப்படுகின்றன? போன்றவற்றை இடையிடையே விளக்கியுள்ள பப்லு, குறிப்பாக நிழல்உலக தாதாக்கள் செயல்படும் விதத்தை எழுதியிருந்தார்.
பாலிவுட் படத்தில் கதாநாயகன்
பப்லு தற்போது எழுதியுள்ள கடிதமும் பரபரப்பை உருவாக் குவதற்காக இருக்கலாம் என உபி அரசு சந்தேகிக்கிறது. பப்லுவின் புத்தகத்தை பாலிவு ட்டின் தயாரிப்பாளர் சச்சிதானந்த் ஸ்ரீவாத்சவா படமாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தின் ஹீரோவாக நடிக்க பப்லு விரும்புகிறார். இதை யொட்டி அவருக்கு பெயில் கிடைக்கவில்லை என்பதால், அப்படத்தின் பணிகள் தொடங் காமல் உள்ளன.