

பெங்களூரு: கர்நாடக பேரவைத் தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத), ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தனித்து களமிறங்க முடிவெடுத்துள்ளன. வேட்பாளர் தேர்வு, போட்டியிடும் தொகுதி ஆகியவற்றை இறுதி செய்வதில் காங்கிரஸ், பாஜக மேலிடம் தீவிரமாக இறங்கியுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் மஜத, இந்த தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 93 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் கே.ஆர்.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சா.ரா.மகேஷ், சாமுண்டீஸ்வரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜி.டி.தேவேகவுடா, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் கோலார் தங்கவயல் தொகுதியில் ரமேஷ்பாபு ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னப்பட்டணாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமியும், அவரது மகனும் நடிகருமான நிகில்குமாரசாமி ராம்நகர் தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.