ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168% குறைந்தன: மத்திய அமைச்சர் தகவல்

மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் 168 சதவீதம் குறந்துள்ளதாகவும், கடந்த 2015-ல் இருந்து இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் 265 சதவீதம் குறைந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பிரதமர் மோடி அரசு, ‘தீவிரவாதத்திற்கு எதிரான ஜீரோ சகிப்புத்தன்மை கொள்கை’யைக் கொண்டுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட தீவிரமான நடவடிக்கைகள் உறுதியான பலனைத் தந்துள்ளன. உரி தாக்குதலுக்கு எதிராக 2016-ம் ஆண்டு சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது. 2019-ம் ஆண்டு நிகழ்ந்த புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் கலவரத்தின் மூலமாக நிகழும் வன்முறைகள் 80 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்களின் இறப்பு விகிதம் 89 சதவீதமாக குறைந்துள்ளது, 6,000 போராளிகள் சரணடைந்துள்ளனர்.

மோடி ஆட்சியின் கீழ், ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கை 168 சதவீதம் குறைந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் குற்றம் 94 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இடதுசாரி தீவிரவாத நடவடிக்கைகள் இருமடங்கு, அதாவது 265 சதவீதம் குறைந்துள்ளன.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் கீழ் வடகிழக்கு மாநிலங்களில் அமைதிக்கான புதிய சகாப்தம் தொங்கியுள்ளது. திரிபுரா,மேகாலயா மாநிலங்களில் முழுவதுமாகவும், அசாமில் 60 சதவீதமும் ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த மண்டலங்களில் அமைதியை நிலைநாட்ட 2020-ம் ஆண்டு போடோ ஒப்பந்தம், 2021-ம் ஆண்டு கர்பி அங்லாங் ஒப்பந்தம், 2022-ம் ஆண்டு அசாம் - மேகாலயா இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம் என பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

எனினும், உண்மையான எண்ணிக்கைகள் தொடர்பாக எந்த ஆதாரங்களையும் அமைச்சர் காண்பிக்கவில்லை. முன்னதாக, இந்தியா கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுகோடு அருகே நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதலை நடத்தியது. கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 26-ல் இந்திய விமானப்படை, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்தது. இந்தத் தாக்குதல் பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 40 ஆயுதப்படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in