நாட்டின் நலன் என்று வரும்போது எங்களுக்குள் அரசியலுக்கு இடமில்லை -  பாகிஸ்தானுக்கு சசி தரூர் பதிலடி

திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் | கோப்புப்படம்
திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசி தரூர் | கோப்புப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: "நாட்டின் நலனுக்காக நிற்கும் போது நாங்கள் அனைவரும் ஒன்றுதான். எங்களுக்குள் அரசியலுக்கு இடமில்லை" என திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி குறித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் தனிபட்ட தாக்குதலுக்கு பதிலடியாக இவ்வாறு தெரிவித்துள்ளார்

ஐ,நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக அங்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்திய பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் தாக்கி பதில் அளித்திருந்தார். பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டக் குரல்கள் எழுந்தன.

இந்தநிலையில் பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர். இதுகுறித்து தனது அவர் ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச அளவில் நாட்டிற்காக நிற்கும் போது நாம் அனைவரும் ஒன்றுதான். நமது எதிரிகளும், தீய எண்ணம் கொண்டவர்களும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நாட்டின் நலன் என்று வரும்போது இந்தியாவில் அரசியலுக்கு இடம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப்பதிவில், பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பெகலின் வீடியோவை அவர் டேக் செய்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் அமைச்சரின் கருத்துக்கு சனிக்கிழமை கண்டனம் தெரிவித்திருந்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் "பிலாவல் பூட்டோவின் பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்பட வேண்டும். நமது பிரதமரைப் பார்த்து அவ்வாறு பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நாம் மாறுபட்ட அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால், இது நமது நாட்டைப் பற்றியது; நமது பிரதமரைப் பற்றியது. நரேந்திர மோடி நமது பிரதமர்” என்று தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் அமைச்சரின் பிரதமர் மோடி பற்றிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைநகரங்களிலும் பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் போராட்டம் நடந்தது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பாகிஸ்தானுக்கு எதிராகவும், பிலாவல் பூட்டோ சர்தாரிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னணி: ஐ.நா பாதுகாப்பு அவையில் புதன்கிழமை பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்தார். அப்போது, பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாடு பாகிஸ்தான் என சாடினார். இதையடுத்து, ஐநா பாதுகாப்பு அவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பிரதமர் நரேந்திர மோடியை குஜராத் கலவரத்தோடு தொடர்பு படுத்தி கடுமையாக விமர்சித்தார்.

இந்தியா கண்டனம்: பிலாவல் பூட்டோ சர்தாரியின் பேச்சுக்கு வெளியுறவுத்துறை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "விரக்தியின் விளிம்பில் இருந்து கொண்டு பிலாவல் பூட்டோ சர்தாரி பேசி இருக்கிறார். பயங்கரவாதத்தை அரசின் கொள்கையாகக் கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான். ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்த நாடு அது.

லக்வி, ஹபீஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் என ஐ.நா.வால் பயங்கரவாதிகள் என அறிவிக்கப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்து வரும் நாடு பாகிஸ்தான். ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட 27 பயங்கரவாத அமைப்புகளை செயல்பட அனுமதித்திருக்கும் நாடு பாகிஸ்தான். அந்த நாட்டைச் சேர்ந்த பிலாவல் பூட்டோ சர்தாரியின் நாகரிகமற்ற பேச்சு, அந்த நாட்டுக்கு மேலும் ஒரு தாழ்வு" என தனது கண்டன உரையில் அவர் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in