Published : 19 Dec 2022 09:15 AM
Last Updated : 19 Dec 2022 09:15 AM

7,000 கி.மீ. பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை சீனாவுக்கான எச்சரிக்கை

கோப்புப்படம்

புதுடெல்லி: அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது சீனாவுக்கான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானோ அல்லது சீனாவோ அல்லது இரு தரப்புமோ ஒரே நேரத்தில் எல்லையில் பிரச்சினை தந்தாலும் துரிதமாக செயல்பட்டு முறியடிக்கும் திறனுடன் இந்திய பாதுகாப்பு படைகள் தயார் நிலையில் உள்ளன.

அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் அக்னி-5 ஏவுகணை சோதனை ஒடிசா மாநிலம் அப்துல் கலாம் தீவில் இருந்து பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த ஏவுகணை 7,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரி இலக்கை துல்லியமாகக் தாக்கக் கூடியது. இந்த சோதனை வெற்றி பெற்றது. இதுகுறித்து மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) வட்டாரங்கள் கூறியதாவது:

அக்னி-5 ஏவுகணையில் அணுஆயுதங்களை பொருத்தி தாக்குதல் நடத்த முடியும். அக்னி ரக ஏவுகணை எடை அதிகமுடையது. அதன் காரணமாக நீண்ட தொலைவுக்கு ஏவுவதில் சிரமங்கள் ஏற்பட்டன. இதை கருத்தில் கொண்டு ஸ்டீலுக்குப் பதில் வேறு உலோகங்கள் கொண்டு அக்னி-5 ஏவுகணை தயாரிக்கப்பட்டுள்ளது. எடை குறைந்துள்ளதால் அதன் பயண தூரமும் அதிகரித்துள்ளது. தற்போது 7,000 கி.மீ. தூரத்துக்கு அப்பாலும் இந்த ஏவுகணை சென்று தாக்கும் வல்லமையுடன் உள்ளது. இதை எங்கு வேண்டுமானாலும் எளிதில் கொண்டு சென்று ஏவ முடியும்.

இந்த ஏவுகணை இந்தியாவின் வலிமையான ஏவுகணையாக மாறி இருக்கிறது. இதன் மூலம் சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட அந்த நாட்டின் வடக்கு பிராந்தியத்தின் எந்தப் பகுதியையும் இலக்கு வைத்து தாக்க முடியும். அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ முயன்ற போதுஅவர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். இந்த சூழ்நிலையில், அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது, சீனாவுக்கு விடுத்த மிகப் பெரிய எச்சரிக்கையாகவே உள்ளது.

தற்போது, 7,000 கி.மீ. தூரத்துக்கு அப்பாலும் சென்று தாக்கும் வகையில் அக்னி ரக ஏவுகணைகளை மேம்படுத்த மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும். அதேநேரத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் அல்லது அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இந்தியா மீது தாக்குதல் நடத்தினால், பதில் தாக்குதல் மட்டுமே நடத்தப்படும்.

இவ்வாறு டிஆர்டிஓ வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவிடம் டாங் பெங்-41 ரக ஏவுகணைகள் உள்ளன. இந்தஏவுகணைகள் 12 ஆயிரம் முதல்15 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று தாக்கும் சக்தி படைத்தவை. இந்தியாவின் எந்த நகரத்தையும் தாக்கும் வகையில் ஏவுகணைகளை சீனா வைத்துள்ளது. அத்துடன் ஏராளமான அணு ஆயுதங்களையும் வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில், சீனாவை எதிர்கொள்ளும் வகையில் அக்னி ரக ஏவுகணைகள் மேம்படுத்தப்படும் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x