

ஹெலிகாப்டர் ஒப்பந்த பேர ஊழலில் லஞ்சம் வாங்கியது யார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து பாஜக தேசிய செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா நேற்று கூறும்போது, “இத்தாலி நிறுவனத்துக்கு ஹெலிகாப்டர் ஒப்பந்தம் வழங்குவதற்காக, அப்போதைய ஆட்சியாளர்கள் லஞ்சம் பெற்றது உறுதியாகி உள்ளது. அனைத்து விவகாரம் குறித்தும் பேசும் ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றது யார் என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்” என்றார்.
2-வது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பயணிப்பதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 ஹெலிகாப்டர்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக அந்த நிறுவனம் ரூ.450 கோடி லஞ்சம் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அந்த நிறுவனத்தின் 2 உயர் அதிகாரிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.
இதையடுத்து, இந்தியாவிலும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த விமானப்படை முன்னாள் தலைமை தளபதி எஸ்.பி.தியாகி, அவரது உறவினர் சஞ்சீவ் மற்றும் ஒரு வழக்கறிஞர் ஆகியோரை சிபிஐ நேற்று முன்தினம் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.