

‘‘அமைதி ஊர்வலத்தை தலைமை யேற்று நடத்த விடாமல், என்னை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்’’ என்று மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் குற்றம் சாட்டி உள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை யில், பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் நேற்று பிற்பகல் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அந்த நேரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைதி ஊர்வலம் நடத்த மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் ஏற்பாடுகள் செய்திருந்தார். இந்நிலையில், தன்னை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் நிருபம் நேற்று கூறியதாவது: என்னுடைய வீட்டுக்கு வெளியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளியில் செல்ல என்னை அனுமதிக்கவில்லை. அமைதி ஊர்வலத்தை தடுக்கவே அவர்கள் நினைக்கின்றனர். ஆனால், பிரதமர் மோடியிடம் கேட்க நிறைய கேள்விகள் இருக்கின்றன. எங்கள் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு, அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.
மேலும், அமைதி ஊர்வலத்தின் போது எதிர்ப்பு தெரிவிக்க நாங்கள் நினைக்கவில்லை. பண மதிப்பு நீக்கத்தால் மக்கள் படும் கஷ்டங்கள் குறித்து பதாகைகள் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் ஏந்தி செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார்.