ஆணவக் கொலைகளால் பறிபோகும் உயிர்கள்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
Updated on
1 min read

மும்பை: ஆணவக் கொலைகளால் நாட்டில் ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார். ‘சட்டமும் நன்நெறியும்’ என்ற தலைப்பில், மும்பை பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அவர் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: “நாட்டில் ஆணவக் கொலைகளால் ஆண்டுதோறும் நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர். சாதி மாறி மலரும் நேசத்திற்காகவே பல உயிர்கள் பறிபோகின்றன. நாட்டில் இன்றும் ஒடுக்கப்பட்ட நலிந்த மக்கள், பெரும்பான்மை சமூகத்தினரின் அடக்குமுறையால் தங்கள் விருப்பம்போல் வாழ இயலாத நிலையில் உள்ளனர்.

நலிந்தோரின் கலாச்சாரத்தை ஆதிக்க சக்தியினர் உடைத்தெறுகின்றனர். எளியோரின் கலாச்சாரம் சில நேரங்களில் அரசாங்க அமைப்புகளாலும் சிதைக்கப்படுகிறது. நலிந்தோர் மேலும் மேலும் விளிம்புநிலைக்கு தள்ளப்படுகின்றனர். சமூக கட்டமைப்பால் கடைநிலையில் உள்ள ஒடுக்கப்பட்டோரின் விருப்பங்கள் நிறைவேறுவதெல்லாம் மாயையாகத் தான் உள்ளது.

எனக்கு எது நன்னெறியாக இருக்கிறதோ அது உங்களுக்கும் நன்னெறியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லையே? உத்தரப் பிரதேசத்தில் 1991-ல் 15 வயது சிறுமி ஒருவர் கொல்லப்பட்டார். அதை நியாயப்படுத்தி ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரையில், கிராம மக்கள் 15 வயது சிறுமியின் படுகொலையை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சமூகத்தின் நடத்தை விதிகளின்படி சரியென்று அவர்கள் ஏற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பகுத்தறிவாளர்களுக்கு அது நிச்சயமாக நடத்தை விதிகளாக இருக்காது. ஆண்டுதோறும் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வதாலேயே நூற்றுக் கணக்கானோர் உயிரிழக்கின்றனர்.

சட்டப் பிரிவு 377 தன்பாலின உறவை கிரிமினல் குற்றமாகக் கருதியது. அந்த நன்னெறி காலஞ்சென்றது. அதை உச்ச நீதிமன்றம் திருத்தி தன்பாலின உறவு கிரிமினல் குற்றமாகாது என்றது. முற்போக்கு அரசியல் சாசனம் தான் நம்மை வழி நடத்திச் செல்லும் சக்தி” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in