Published : 18 Dec 2022 07:18 AM
Last Updated : 18 Dec 2022 07:18 AM

ககன்யான் திட்டம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறும் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நம்பிக்கை

இஸ்ரோ தயாரித்துள்ள விண்கலம். அடுத்த படம்: விண்வெளி உடை.

மும்பை: ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி உள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சிகளை செய்து வருகிறது. இதன்படி கடந்த 2007-ம் ஆண்டில் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது.

கடந்த 2014-ம் ஆண்டில் இந்த திட்டத்துக்கு ககன்யான் என்று பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன. விண்வெளிக்கு அனுப்புவதற்காக இந்திய விமானப் படையை சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் ரஷ்யாவில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது அவர்களுக்காக பெங்களூருவில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

ககன்யான் திட்டத்துக்கு இஸ்ரோவின் அதிநவீன எல்விஎம்-3 ராக்கெட்டை பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி வீரர்கள் தங்குவதற்கான விண்கலம், விண்வெளி உடை, விண்வெளி பயணத்துக்குப் பிறகு பூமி திரும்பும் வீரர்கள் பத்திரமாக தரையிறங்குவதற்கான பாராசூட் ஆகியவை நேர்த்தியாக தயாரிக்கப்பட்டுள்ளன.

வரும் 2024-ம் ஆண்டு மத்தியில் ஆளில்லாத சோதனை விண்கலம் விண்வெளிக்கு செலுத்தப்பட உள்ளது. ஆளில்லா விண்கலத்தில் அனுப்புவதற்காக 'வியோமா மித்ரா' என்ற பெண் ரோபோவை இஸ்ரோ தயார் செய்திருக்கிறது. அந்த ரோபோ விண்வெளியில் ஆய்வு செய்து இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பும்.

அதன்பின் 2024-ம் ஆண்டு இறுதியில் 3 இந்திய வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக இஸ்ரோவின் திரவ எரிபொருள் திட்ட இயக்குநர் வி.நாராயணன் மும்பையில் நேற்று முன்தினம் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் கூறியதாவது: ககன்யான் திட்டத்துக்காக இதுவரை 195 வகையான சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 164 சோதனைகள் வெற்றி பெற்றுள்ளன. விண்வெளிக்கு இந்திய வீரர்கள் அனுப்புவதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது. கரோனா பெருந்தொற்றால் எழுந்த அசாதாரண சூழ்நிலை மற்றும் இந்திய வீரர்களின் பாதுகாப்பு கருதி திட்டத்தில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

விண்வெளிக்கு அனுப்பப்படும் இந்திய வீரர்கள் 2 வாரங்கள் விண்வெளியில் ஆய்வு செய்து விட்டு பூமிக்கு பத்திரமாக திரும்புவார்கள். ககன்யான் திட்டம் இந்தியாவின் கனவு திட்டமாகும். இது தேசிய திட்டமாக முன்னிறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் வெற்றிக்காக இஸ்ரோ மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலோடு காத்திருக்கிறது. முதல் முயற்சிலேயே வெற்றிகரமாக திட்டத்தை செயல்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறோம். இந்த முயற்சியில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x