

பெங்களூரு: ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனம் 2022-ம் ஆண்டின் ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியுள்ளதாவது: இந்த ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தீபாவளி தினத்தன்று ரூ.75 ஆயிரத்து 378க்கு 87 வகையான உணவை வாங்கி, தனது குடும்பத்தினருக்கு விருந்து அளித்தார். இந்த ஆர்டரே ஸ்விக்கியில் 2022-ம் ஆண்டு கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிங்கிள் ஆர்டர் ஆகும். இதற்கடுத்து புனேவை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் ரூ.71 ஆயிரத்து 229க்கு உணவு வாங்கி, தனது ஊழியர்களுக்கு விருந்து அளித்தார். பெங்களூருவை சேர்ந்த மற்றொரு நபர் ஒரே வாரத்தில் 118 வகையான உணவை ஆர்டர் செய்துள்ளார்.
ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக தொடர்ந்து 7-வது ஆண்டாக பிரியாணியே முதலிடத்தில் இருக்கிறது. அதாவது ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்படுகின்றன. கடந்த 2021-ல் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரியாணிக்கு அடுத்த நிலையில் மசாலா தோசை, மூன்றாம் இடத்தில் சிக்கன் ஃபிரைட் ரைஸ் ஆகியவை உள்ளன. இறைச்சியை விரும்பி உண்ணும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடத்திலும், ஹைதராபாத் இரண்டாம் இடத்திலும், சென்னை மூன்றாம் இடத்திலும் இருக்கின்றன. இவ்வாறு ஸ்விக்கி ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.