தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம்

தனித்தமிழ் இயக்க முன்னோடி புலவர் மகிபை பாவிசைக்கோ காலமானார்: பிறந்த நாளான இன்று பெங்களூருவில் உடல் அடக்கம்
Updated on
2 min read

தனித் தமிழ் இயக்க முன்னோடியும், உலகத் தமிழர்களின் உரிமைக்காக பாடுபட்டவருமான‌ புலவர் மகிபை பாவிசைக்கோ (74) பெங்களூருவில் காலமானார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ம‌கிபாலன்ப‌ட்டியில் கடந்த 1942-ம் ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி புலவர் மகிபை பாவிசைக்கோ பிறந்தார். இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்த இவரது இயற்பெயர் பீர் முகமது. 12 வயதில் தமிழில் புலமை பெற்று பாட்டு இயற்றியதால், தன‌து பெயரை மகிபை பாவிசைக்கோ என மாற்றிக் கொண்டார். சொந்த ஊரில் தொடக்கக் கல்வியை முடித்த இவர், திருப்பத்தூர் நாகப்பா மருதப்பா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். சென்னை நக்கீரர் கழக திருவள்ளு வர் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றார்.

சிறுவயதில் கவிதைகளை எழுதத் தொடங்கிய‌ பாவிசைக்கோ, சிறுகதை, திரைக்கதை, நாவல், நாடகம், கட்டுரை, திறனாய்வு என பல்துறைகளிலும் சிறந்து விளங்கினார். கல்லூரி காலத்தில் இந்தி எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றுள்ளார்.

புரட்சிகர சிந்தனையாளர்

தொடக்கத்தில் திராவிட இயக்க கருத்துகளால் ஈர்க்கப்பட்ட இவர், பின்னாளில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் சிந்தனையில் ஈடுபாடு கொண்டார். அதிகாரத்துக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை எழுதிய இவர், பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி' ஏட்டில் பத்திரிகையாளராக பணி யாற்றினார். பின்னர் முஸ்லிம் முரசு, செம்பரிதி, ஒருமைத் தூதன், வஞ்சி மாலை உள்ளிட்ட பத்திரிகைகளில் பொறுப்பாசிரியராகவும் இருந்தார்.

தனித்தமிழ் இயக்க செயல்பாடு களினால் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் குடியேறி னார். அங்கு தமிழ் மொழி பாது காப்பு போராட்டங்களையும், தமிழர் நலப் போராட்டங்களையும் முன் னின்று நடத்தியுள்ளார். தமிழ் தேசிய அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்ட இவர், ஈழப் போரட்டத்துக்காக ‘விடுதலைப் புலிகள்' நாடகத்தை நடத்தி நிதி திரட்டிக் கொடுத்தார்.

பெரியார், பெருஞ்சித்திரனார், பாவேந்தர் பாரதி தாசன் உள்ளிட்ட தமிழக ஆளுமைகள் மட்டுமில்லாமல் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்கள் பிரபாகரன், ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகினார். நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தியபோது அவரை மீட்க பெரிதும் உதவினார்.

தன்மான தமிழர் பேரவை, தனித் தமிழ் சேனை உள்ளிட்ட‌ கர்நாடக தமிழ் அமைப்புகளின் நிறுவனத் தலைவராகவும் இயங்கினார்.

பிறந்த நாளில் உடல் அடக்கம்

பாவிசைக்கோவுக்கு ஒரு மாதத் துக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலை யில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்து வதற்காக இவரது உடல் இன்று காலை லிங்கராஜாபுரத்தில் வைக்கப் படுகிறது. பிற்பகல் 2.30 மணியள வில் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு அல்சூர் திருவள்ளுவர் சிலை அருகே இறுதி அஞ்சலி செலுத்தப் படுகிறது. அங்கிருந்து லட்சுமிபுரத் தில் உள்ள கல்லறைக்கு கொண்டு செல்லப்பட்டு தமிழ் முறைப்படி, அவரது பிறந்த நாளில் (இன்று) அடக்கம் செய்யப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in