

'வார்தா' புயலின் சீற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திரப்பிரதேச விவசாயிகள் 'வார்தா' புயலை வரவேற்றுள்ளனர்.
அவர்களின் நிலங்களில் விதைப்புக்கு ஏற்ற வகையில் மிதமாக மழை பெய்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தண்ணீரின் இருப்பும் அதிகரித்துள்ளதால் விவசாயத்துக்கான ஆரம்ப கட்ட செலவுகள் குறையும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மழைக்காலத்தில் ஏராளமான சேதம் ஏற்படுவதாகக் கூறி நெல், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட பருவகாலப் பயிர்களைப் பயிரிடுவதை பெரும்பாலான விவசாயிகள் நிறுத்திவிட்டனர். அதே நேரத்தில் தற்போது பருவ கால அறுவடையை முடித்த ஆந்திர கடலோர மாவட்ட விவசாயிகள் அவற்றைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் கவலை
கோதுமை, பருப்பு வகைகள் உள்ளிட்ட குளிர்காலப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயிகள் அதிக மழை எச்சரிக்கை காரணமாக கவலையுடன் இருந்தனர்.
ஆனால் சென்னை அருகே கரையைக் கடந்த 'வார்தா' புயல், ஆந்திரப் பிரதேசத்துக்கு நெல்லூர் தவிர்த்து மிதமான மழைப் பொழிவைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறது. இதனால் ஏராளமான விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா மற்றும் மற்ற கடலோர மாவட்ட விவசாயிகள் தங்களின் நிலத்தைப் பண்படுத்தி, விதைப்பைத் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்துக் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி ராமராவ் கூறும்போது, ''ஆந்திர மாநிலத்தில் விவசாயத்தைத் தொடங்க ஏதுவான தட்பவெப்பம் நிலவுகிறது. மித மழைப்பொழிவு விவசாயிகளுக்குப் பயனுள்ள வகையில் இருக்கிறது. இதனால் எங்களுக்குச் செலவுகளும் குறையும்'' என்றார்.
கடவுள் காப்பாற்றிவிட்டார்
மற்றொரு விவசாயி கோட்டேஸ்வர ராவ் பேசும்போது, ''கடவுள் எங்கள் பயிர்களைக் காப்பாற்றிவிட்டார். வயல்களில் இருந்து நெல்லைச் சேகரித்த விவசாயிகள் அவற்றை மூட்டைகளாக்கி, ஆலைகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். புயல் கிருஷ்ணா மாவட்டத்தைத் தாக்கியிருந்தால் மிக மோசமாக இழப்புகளைச் சந்தித்திருப்போம்'' என்றார்.