2024க்குள் இந்திய சாலைகள் அமெரிக்க சாலைகளுக்கு இணையான தரத்தில் இருக்கும்: நிதின் கட்கரி உறுதி

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
Updated on
1 min read

புதுடெல்லி: 2024க்குள் இந்திய சாலைகள் அமெரிக்க சாலைகளுக்கு இணையான தரத்தில் இருக்கும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் 95ம் ஆண்டு மாநாட்டில் நிதின் கட்கரி ஆற்றிய உரை: "சர்வதேச தரத்திலான கட்டமைப்புகளை நமது நாட்டில் மத்திய அரசு உருவாக்கி வருகிறது. 2024க்குள் இந்திய சாலைகள் அமெரிக்க சாலைகளுக்கு இணையான தரத்தில் இருக்கும். இதற்கான உறுதியை நான் அளிக்கிறேன். பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவினம் தற்போது 16% ஆக உள்ளது. 2024க்குள் இது 9% ஆக குறைக்கப்படும். இதுவும் நிச்சயம் நடக்கும்.

உலக வளங்களில் 40 சதவீதத்தை கட்டுமானத்துறைதான் பயன்படுத்துகிறது. இந்த சதவீதத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கட்டுமானங்களுக்கு சிமென்ட்டும், இரும்பும்தான் மிகவும் முக்கியமானவை. இரும்பின் பயன்பாட்டை குறைக்கவும், அதற்கு மாற்றாக உள்ள பொருட்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மிக முக்கிய காரணிகளில் கட்டுமானத்துறையும் ஒன்று. அதேநேரத்தில், உலகின் 40 சதவீத பொருட்களையும் வளங்களையும் அதுதான் பாதுகாக்கிறது. வளங்களின் பயன்பாட்டை குறைக்கவும், கட்டுமான தரத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

எதிர்கால எரிபொருளாக கிரீன் ஹைட்ரஜன்தான் திகழப் போகிறது. அதை ஏற்றுமதி செய்யும் சாதகமான நிலையில் இந்தியா இருக்கிறது. விரைவில் நாம் அதிக அளவில் எரிபொருளை ஏற்றுமதி செய்வோம். இதன்மூலம் நமக்கு மிகப் பெரிய வளம் கிடைக்க இருக்கிறது. விமானங்கள், ரயில்கள், சாலை போக்குவரத்து என அனைத்திலும் கிரீன் ஹைட்ரஜன் பயன்பாடு இருக்கும். கிரீன் ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகின் மையமாக இந்தியா திகழும். ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்துள்ள நிலையான வளர்ச்சிக் கொள்கையை 2030க்குள் அடைவதை இலக்காகக் கொண்டு இந்தியா செயல்பட்டு வருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in