உலக நலனுக்காக உழைக்கவே இந்தியா வல்லரசாக விரும்புகிறது: ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated on
1 min read

புதுடெல்லி: உலக நலனுக்காக பாடுபடவே இந்தியா வல்லரசாக விரும்புகிறது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக தொழில் கூட்டமைப்பின் 95வது ஆண்டு மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், இந்தியாவின் எதிர்கால இலக்கு என்ன; அதை நோக்கி அது எவ்வாறு பயணிக்கிறது என்பது குறித்துப் பேசினார். அவர் பேசியது வருமாறு: "கடந்த ஆகஸ்ட்டில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது செங்கோட்டையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு எடுக்க வேண்டிய 5 உறுதிமொழிகள் குறித்து குறிப்பிட்டார். இந்தியா வல்லரசாக அந்த உறுதிமொழிகள் மிக மிக இன்றியமையாதவை.

இந்தியா வல்லரசாக விரும்புகிறது என்றால் அது எந்த நாட்டையாவது அடக்க வேண்டும் என்று விரும்புகிறதா என்றால் இல்லை. எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமான ஒரு அடி நிலத்தையாவது எடுத்துக்கொள்ள வேண்டும் என விரும்புகிறதா என்றால் அதுவும் இல்லை. உலக நலனுக்காக உழைக்கவே இந்தியா வல்லரசாக விரும்புகிறது.

1949ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு. அதன் பிறகுதான் அந்த நாடு பொருளாதார ரீதியில் வேகமாக முன்னேறியது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில் 1980 வரை இந்தியா இல்லை. 2014ல்தான் இந்தியா 9வது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தைப் பிடித்தது. தற்போது நாம் உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்திருக்கிறோம். நமது பொருளாதாரம் தற்போது 3.5 ட்ரில்லியன் டாலருக்கு நெருக்கமானதாக இருக்கிறது.

நமது ராணுவம் தற்போது மிகப் பெரிய வலிமையுடன் இருக்கிறது. கல்வான் ஆகட்டும் தவாங் ஆகட்டும் நமது ராணுவ வீரர்கள் தங்கள் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் நோக்கத்தை நாங்கள் ஒருபோதும் கேள்வி கேட்டது இல்லை. கொள்கைகளின் அடிப்படையில் அவர்களோடு விவாதம் மட்டுமே நடத்துகிறோம். அரசியல் என்பது உண்மையைப் பேசுவதாக இருக்க வேண்டும்." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in