Published : 17 Dec 2022 11:34 AM
Last Updated : 17 Dec 2022 11:34 AM
ஜெய்பூர்: "காங்கிரஸ் கட்சி சர்வாதிகார கட்சியோ, ஃபாசிஸ கட்சியோ இல்லை. கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் இருந்தால் அதனால் பிரச்சினை இல்லை" என்று ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை யாத்திரை வெள்ளிக்கிழமை 100-வது நாளை எட்டியது. இந்த நிலையில் யாத்திரை நடந்துவரும் ராஜஸ்தானில் வெள்ளிக்கிழமை ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவருடன் அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட் உடனிருந்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தியிடம் ராஜஸ்தான் கட்சியில் உள்ள உட்கட்சி பூசல், அசோக் கெலாட் - சச்சின் பைலட் அதிகார மோதல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு ராகுல் காந்தி, "இங்கு எந்த முன்முடிவுகளும் இல்லை ஆனாலும் அவைகள் நடக்கின்றன. இது எங்கள் கட்சியின் முக்கிய பிரச்சினை இல்லை. இதுகுறித்து கட்சிக்குள் எந்த குழப்பமும் இல்லை. இந்த சிக்கல் ராஜஸ்தானில் மட்டும் இல்லை, மற்ற மாநிலங்களிலும் உள்ளது. கட்சிக்காக வேலைசெய்யும் தொண்டர்களை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. கட்சியில் இருக்கும் கீழ்மட்ட தலைவர்களையும் கட்சி வேலைகளில் பங்கேற்கச் செய்து அவர்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
ராஜஸ்தான் விவகாரத்தில் தலைவர்களின் அறிக்கைகள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்டது. ஆனாலும் கட்சியின் கட்டமைப்பில் தெளிவு இருக்கிறது. எங்களிடம் குழப்பம் இல்லை. காங்கிரஸ் சர்வாதிகாரக்கட்சியும் இல்லை. எங்களுடையது ஃபாசிஸ்ட் கட்சியும் இல்லை. இங்கு சில மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றது. அதனால் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த அதிகார போட்டி ராஜஸ்தானில் மட்டும் இல்லை. கட்சியின் மத்திய அளவிலும் உள்ளது. இது இப்படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சினை எந்தவொரு பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தாத வரையில் சிக்கல் இல்லை. பொதுவாக, கட்சியினர் பேச விரும்பினால் கட்சி அவர்களை தடுத்து நிறுத்தி மவுனமாக்கி விடுவதில்லை என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்தியல்" என்றார்.
தொடர்ந்து, அடுத்து வரும் மாநிலத்தேர்தலில் கட்சிக்கு யார் தலைமை தாங்கி வழிநடத்துவார்கள் என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "அதை மல்லிகார்ஜூன கார்கேஜியிடம் கேளுங்கள். அவர்தான் கட்சியின் தலைவர். பாருங்கள், நீங்கள் எல்லோரும் தேர்தல் கணிப்புகளை உருவாக்குகிறீர்கள். ஆனால் ஒன்றை உங்களுக்கு சொல்ல முடியும். ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு உள்ளது, கட்சியினர் நம்பமுடியாத அளவில் பலம் பெற்றுள்ளனர். நான் முன்பே சொன்னது போல, கீழ்மட்டத்தில் இருக்கும் தலைவர்களை, தொண்டர்களை ஆதரித்து பயன்படுத்தினால் கட்சி எளிதாக வெற்றி பெறமுடியும். கட்சிக்காக யார் உழைக்கிறார்களோ, பாடுபடுகிறார்களோ, அவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான அங்கீகாரம் கொடுத்தால் மிகப்பெரிய வெற்றியை பெற முடியும்" என்றார்.
மேலும் இந்திய யாத்திரை பற்றி பேசிய ராகுல் காந்தி, "ராஜஸ்தானில் யாத்திரைக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாங்கள் இந்த யாத்திரையை தொடங்கும் போது பத்திரிகை நண்பர்கள் இந்த யாத்திரை தென்மாநிலங்களில் மட்டும் தான் வெற்றி பெரும் என்றனர். மகாரஷ்ராவில் யாத்திரை வெற்றி பெற்ற போது, இந்தி பேசும் மாநிலங்களில் யாத்திரை வெற்றி பெறாது என்றனர். நாங்கள் இந்தி பேசும் மாநிலங்களுக்குள் வந்தபோது, யாத்திரை மத்தியப் பிரதேசத்தில் வெற்றி பெற்றிருக்கலாம், கட்சிக்குள் கோஷ்டி பூசல் இருப்பதால் ராஜஸ்தானில் யாத்திரை வெற்றி பெறாது என்றனர். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வெளியே வந்து இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு அளித்தனர். எங்களது கட்சியினர் சிறப்பாக வேலை செய்துள்ளனர். அதனால் நாங்கள் ராஜஸ்தானில் சிறப்பான வரவேற்பை பெற்றோம்" என்றார்.
முன்னதாக, ராஜஸ்தானிஸ் கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதில் இருந்து முதல்வர் பதவி குறித்து அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையில் அதிகார போட்டி நிலவியது. இந்த மோதல் காரணமாக, அசோக் கெலாட் தனது முன்னாள் துணை முதல்வரை துரோகி என்று சொல்லி, என்னுடைய இடத்தை அவர் பெற முடியாது. 2020 ல் அவர் கட்சிக்கு எதிராக கலகம் செய்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார் என்று கூறியிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், "அசோக் கெலாட் போன்றவர்கள் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது பொருத்தமற்றது. சேற்றை வாரி பூசுவதால் எந்த பயனும் இல்லை. ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைய கட்சியை வலுப்படுத்துவது கட்சியினர் அனைவரது கடமையாகும்" என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT