Published : 17 Dec 2022 07:14 AM
Last Updated : 17 Dec 2022 07:14 AM
புதுடெல்லி: இமயமலையில் உத்தராகண்ட் மாநிலத்தின் கங்கோத்ரியில் உற்பத்தியாகும் பாகீரதி நதி, தேவபிரயாக் என்ற இடத்தில் அலக்நந்தா நதியுடன் கலந்து கங்கை நதியாகிறது. உத்தரா கண்ட், உத்தர பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்கள் வழி யாக பாயும் கங்கை நதி, ஹூக்ளி, பத்மா என இரு நதிகளாகப் பிரிந்து மேற்குவங்க மாநிலம் மற்றும் வங்கதேசம் வழியாக செல்கிறது. கங்கை நதியினால் இந்தியாவின் 11 மாநிலங்களைச் சேர்ந்த 50 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டில் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றது. அதே ஆண்டு ஜூன் மாதம் ரூ.20,000 கோடி பட்ஜெட்டில் ‘தூய்மை கங்கை' திட்டம் தொடங்கப்பட்டது. ஆரம்பகட்ட பணிகள்,இடைக்கால பணிகள், தொலைநோக்கு பணிகள் என 3 பிரிவுகளாக இத்திட்டம் செயல்படுத் தப்படுகிறது.
முதல்கட்டமாக கங்கை நதியின்மேற்பரப்பில் மிதந்த கழிவுகள் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. பல்வேறு நகரங்கள், கிராமங்களில் இருந்து கங்கையில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்பட்டது. ஆலைக் கழிவுகள் நதியில் கலப்பதை தடுக்க சுமார் 341 சுத்திகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டு வருகின்றன.
கங்கை நதியோரம் வசித்த மக்களுக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. கங்கை யில் சடலங்களை வீசுவதை தடுக்க நவீன சுடுகாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் உலகின் மிகச் சிறந்த 10 சுற்றுச் சூழல் திட்டங்கள் அடங்கிய பட்டியலை ஐ.நா. சபையின் ஓர் அங்கமான ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் வெளியிட்டிருக்கிறது. இதில் இந்தியாவின் தூய்மை கங்கை திட்டம் இடம்பெற்றிருக்கிறது.
இது குறித்து ஐ.நா. சபை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட திட்டத்தால் கங்கை நதி மற்றும் கங்கை சமவெளி பகுதிகள் மீட்கப்பட்டுள்ளன. டால்பின், ஆமைகள், மீன்கள் உள்ளிட்டகடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. கங்கையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் வசிக்கும் விலங்குகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சுமார் 2,525 கி.மீ. தொலைவுக்கு கங்கை நதி பாய்கிறது. இதில் இந்தியாவுக்கு உட்பட்ட 1,500 கி.மீ. தொலைவுக்கு கங்கை நதி மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை 30,000 ஹெக்டேர் பரப்பளவுக்கு வனப்பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசின் தூய்மை கங்கை திட்டம் உலகின் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் திட்டங்களில் ஒன்றாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் 70 நாடுகளில் மேற்கொள்ளப்படும் 150 சுற்றுச்சூழல் திட்டங்கள் குறித்து ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அவற்றில் இருந்து உலகின் மிகச் சிறந்த 10 சுற்றுச்சூழல் திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தூய்மை கங்கை திட்டமும் இடம் பெற்றது பெருமைக்குரியது.
கனடாவின் மாண்ட்ரியால் நகரில் அண்மையில் நடந்த 15-வது பருவநிலை மாற்றம் மாநாட்டில் உலகின் மிகச் சிறந்த 10 சுற்றுச் சூழல் திட்டங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. மத்திய அரசு சார்பில் தூய்மை கங்கை திட்டத்தின் தலைமை இயக்குநர் அசோக்குமார் விருதினைப் பெற் றுக் கொண்டார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT