Last Updated : 15 Dec, 2016 08:12 AM

 

Published : 15 Dec 2016 08:12 AM
Last Updated : 15 Dec 2016 08:12 AM

காவிரி பிரச்சினையில் நீதி கேட்டு டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியிடம் மனு

காவிரி நதி நீர் பிரச்சினையில் நீதி கேட்டு, தமிழகத்தின் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் டெல்லியில் நேற்று போராட்டம் நடத்தினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு இந்த ஆண்டு சுமார் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப் பிடப்பட்டுள்ளது. விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் கே.வி.இளங்கீரன் தலைமையில் நடுங்கும் குளிருக்கு மத்தியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து ‘தி இந்து’விடம் இளங்கீரன் கூறும்போது, “நம் நாட்டின் உயரிய அமைப்பான உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் கர்நாடக அரசு காவிரி நீரை தமிழகத்துக்கு விட மறுக்கிறது. இதன் மீது மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழகத்துக்கு பாரபட்சமாக நடந்துகொள்கிறது. எங்களின் 3 போக சாகுபடி இரண்டாகவும் பிறகு ஒன்றாகவும் குறைந்து, தற்போது ஒருபோக சம்பா சாகுபடிக்கும் தண்ணீர் கிடைக்காத நிலை உள்ளது.

இதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக டெல்டா பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எங்களை பாதுகாக்க வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகளின் சுமார் ரூ.7,000 கோடி பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தென்னக நதிகள் இணைப்பை துரிதப்படுத்த வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். தமிழக விவசாயிகளை பிரதமர் அழைத்துப் பேச வேண்டும் என்பது உள்ளிட்ட 7 முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா, போராட்டத்தை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர், “தமிழக விவசாயிகளின் நியாயமான இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழக விவசாயிகளை பிரதமர் அழைத்துப் பேச வேண்டும்” என்றார்.

ராகுல் காந்தியிடம் மனு

போராட்டம் நடைபெற்ற ஜந்தர் மந்தர் பகுதிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் வந்தனர். அப்போது ராகுல் காந்தியை சந்தித்த தமிழக விவசாயிகள் அவரிடம் தங்களின் கோரிக்கை மனுவை அளித்தனர். இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்துவதாக அப்போது ராகுல் உறுதியளித்தார்.

இந்த கூட்டமைப்பில், காவிரி பாசன பாதுகாப்பு சங்கம், காவிரி பாசன விவசாயிகள் விழிப்புணர்வு சங்கம், பொன்னேரி பாசன விவசாயிகள் சங்கம், காவிரி கடைமடை பாசன விவசாயிகள் நலச்சங்கம், வடவாறு வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கம், ராதா வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கம், கொள்ளிடம் பாசன விவசாயிகள் சங்கம் ஆகிய 7 சங்கங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x