ராகுல், காங். ட்விட்டர் கணக்குகளில் விஷமிகள் ஊடுருவல்

ராகுல், காங். ட்விட்டர் கணக்குகளில் விஷமிகள் ஊடுருவல்
Updated on
1 min read

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இணைய விஷமிகள் ஊடுருவியுள்ளனர்.

புதன்கிழமை மாலை ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் ஆபாசமான, அவதூறான ட்வீட்கள் பதிவாகியிருந்தன. இந்த ட்வீட்களைப் பார்த்தவுடனேயே இணையவாசிகள் பலரும் அதை பகிரத் தொடங்கினர். இதனையடுத்து ட்விட்டர் கணக்கை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன.

இதுமட்டுமல்லாமல் இன்று (வியாழக்கிழமை) காலை காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் விஷமம்..

சமூக வலைத்தளங்களில் ராகுல் ட்விட்டர் கணக்கு ஊடுருவப்பட்ட தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே அந்தக் கணக்கு மீட்கப்பட்டு, அனைத்து ட்வீட்களும் நீக்கப்பட்டன.

எனினும் ஒரு சில மணி நேரங்களிலேயே ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் விஷமிகள் ஊடுருவினர். இந்த முறை புதிய அவதூறு ட்வீட்களைப் பதிவு செய்தனர்.

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது முறையாக வியாழக்கிழமை காலையும் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்குகளில் விஷமிகள் ஊடுருவியுள்ளனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கம்:

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தனது ட்விட்டர் பக்கத்தில், ''ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கில் சில விஷமிகள் ஊடுருவியுள்ளனர். இதுபோன்ற கீழ்த்தரமான தந்திர வேலைகள், மக்களின் பிரச்சினைகளுக்காகப் போராடும் ராகுல் காந்தியின் செயல்பாடுகளைப் பாதிக்கவோ, அவரைப் பின்வாங்கவோ செய்யாது'' என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in