Published : 16 Dec 2022 04:47 AM
Last Updated : 16 Dec 2022 04:47 AM

லஞ்ச வழக்கு | சந்தர்ப்ப சூழ்நிலை ஆதார அடிப்படையில் அரசு ஊழியரை குற்றவாளியாக அறிவிக்கலாம் - உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு

புதுடெல்லி: லஞ்ச வழக்குகளில் நேரடி ஆதாரங்கள் அவசியமில்லை. சந்தர்ப்ப சூழ்நிலை ஆதாரங்கள் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களை குற்றவாளியாக அறிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி என்சிடி பகுதியைச் சேர்ந்த ரவிஜித் சிங் சேத்தி, 2000-ம் ஆண்டில் தனது கடையில் மின்சார மீட்டர் பொருத்துவதற்காக, அரசு அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்தார்.

அங்கு பணியிலிருந்த பெண் ஊழியர் நீரஜ் தத்தா ரூ.10,000 லஞ்சம் கேட்டதால், லஞ்ச ஒழிப்பு போலீஸில் ரவிஜித் சிங் சேத்தி புகார் செய்தார். போலீஸாரின் அறிவுரைப்படி 2000 ஏப்ரல் 17-ல், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நீரஜ் தத்தாவிடம், ரவிஜித் சிங் சேத்தி வழங்கினார். அந்தப் பணத்தை நீரஜ் தத்தா வாங்கி, தனது உதவியாளர் யோகேஷ் குமாரிடம் அளித்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், நீரஜ் தத்தா, யோகேஷ் குமாரைக் கைது செய்து, லஞ்சப் பணத்தைக் கைப்பற்றினர். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், நீரஜ் தத்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்தது. யோகேஷ் குமாருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. மேலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நீரஜ் தத்தாவின் தண்டனையை உறுதி செய்ததுடன், யோகேஷ் குமாரை விடுதலை செய்தது.

உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, நீரஜ் தத்தா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, புகார்தாரர் ரவிஜித் சிங் சேத்தி உயிரிழந்தார்.

வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள் அமர்வு 2019-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், “புகார்தாரர் இறந்துவிட்டதால் அவரிடம் நேரடியாக விசாரணை நடத்த முடியவில்லை. லஞ்சம் கேட்டதற்கான, வாங்கியதற்கான நேரடி ஆதாரமும் இல்லை. தடயவியல் சோதனை, சந்தர்ப்பச் சூழ்நிலை ஆதாரங்களை ஏற்கலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம். எனவே, இந்த வழக்கை 5 நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப் பரிந்துரைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, நீதிபதிகள் அப்துல் நசீர், ராமசுப்பிரமணியன், பி.ஆர்.கவாய், போபண்ணா, நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது, நீரஜ் தத்தா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, “நீரஜ் தத்தா லஞ்சம் கேட்டதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அவரிடம் இருந்து லஞ்சப் பணம் கைப்பற்றப்படவில்லை. அவரது உதவியாளர் யோகேஷ் குமாரிடம் இருந்தே பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நீரஜ் தத்தா லஞ்சம் வாங்கவில்லை. அவர் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. அவரை விடுதலை செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

டெல்லி அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் சூட், “நீரஜ் தத்தா கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளார். கீழமை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அவரது குற்றத்தை உறுதிசெய்து, தண்டனை வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இந்த வழக்கில் 5 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது:

அரசு நிர்வாகத்தில் ஊழல் அறவே ஒழிக்கப்பட வேண்டும். லஞ்ச விவகாரம் தொடர்பாக புகார் அளிக்கும் பொதுமக்களும், போலீஸாரும் முழு முனைப்புடன் செயல்பட்டு, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் லஞ்சத்தைக் கட்டுப்படுத்த முடியும்.

நாடு முழுவதும் லஞ்சம் வாங்கும், ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டிக்க வேண்டும். லஞ்சம், ஊழல் ஆகியவை புற்றுநோய்க்கு இணையானவை. புற்றுநோய் உடலை அரிப்பதுபோல, லஞ்சம், ஊழல் ஆகியவை நாட்டின் வளர்ச்சியை அரித்துவிடும்.

சிறிய அளவிலான ஊழல்கள் மக்களைப் பாதிக்கின்றன. பெரிய அளவிலான ஊழல்கள் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

இவற்றைக் கருத்தில் கொண்டு, முக்கிய உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.

அரசு ஊழியர்கள் மீதான லஞ்சம், ஊழல் புகார்களில் நேரடி ஆதாரங்கள் அவசியமில்லை. சந்தர்ப்பச் சூழ்நிலை, ஆதாரங்கள் அடிப்படையிலேயே அரசு ஊழியர்களை குற்றவாளியாக அறிவித்து, தண்டிக்கலாம்.

அரசு ஊழியர் லஞ்சம் கேட்காமல் விண்ணப்பதாரரே லஞ்சம் அளித்து, அதை அரசு ஊழியர் பெற்றுக்கொண்டால், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 7-ன்படி நடவடிக்கை எடுக்கலாம். அரசு ஊழியர் லஞ்சம் கேட்டு, விண்ணப்பதாரர் வழங்கினால் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 13-ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.

அரசு ஊழியர் நீரஜ் தத்தாவின் மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் முன்னிலையில் பட்டியலிட வேண்டும். அவர் ஏதாவது ஓர் அமர்வுக்கு வழக்கைப் பரிந்துரை செய்வார். அந்த அமர்வு, நீரஜ் தத்தா வழக்கில் தீர்ப்பு வழங்கும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x