

சோலார் பேனல் மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் (சூரிய மின்சக்தி தகடு) அமைத்துத் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக சரிதா நாயரும், ராதாகிருஷ்ணனும் 2013-ல் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீனில் வெளியான இவ்விரு வருக்கும் எதிராக, திருவனந்த புரம், எர்ணாகுளம், பத்தனம் திட்டா, பெரும்பாவூர், கோவை உட்பட பல்வேறு நீதிமன்றங் களில் 33 வழக்குகள் நடந்து வருகின்றன.
இதில், ரூ.40 லட்சம் மோசடி செய்ததாக, சஜத் என்பவர் சரிதா மற்றும் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அளித்த புகார் அடிப்படை யில், பெரும்பாவூர் மாஜிஸ் திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக் கப்பட்டது.
குற்றம் உறுதி செய்யப்பட்ட சரிதா நாயருக்கும், பிஜு ராதாகிருஷ்ணனுக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்விருவருடன் குற்றம் சாட்டப்பட்ட நடிகை ஷாலு மேனன், அவரின் தாய் மற்றும் டீம் சோலார் நிறுவன பணியாளர் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர்களை வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.
சோலார் பேனல் ஊழல் தொடர்பான வழக்குகளில் முதல் தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ளது. இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.