

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சமீபத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான ஒருவர், சதாசிவத்தை சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சதாசிவத்தை ஆளுநராக நியமிப்பது பற்றி மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக உள்ள இஎஸ்எல் நரசிம்மனை மாற்றிவிட்டு, அவருக்கு பதிலாக பி.சதாசிவத்தை நியமிக்க மத்திய அரசு உத்தேசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த இரு மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஹைதராபாத் உள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், அதை எளிதாக சமாளிக்க வசதியாக முன்னாள் நீதிபதியான பி.சதா சிவத்தை மத்திய அரசு நியமிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.
இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுனத்தின் ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கு தொடர்பாக இ.எஸ்.எல். நரசிம்மனிடம் சமீபத்தில் சிபிஐ விசாரணை நடத்தி, அவரது வாக்குமூலத்தைப் பெற்றுச் சென்றுள்ளது. இதேபோன்று சிபிஐ விசாரணை செய்த ஆளுநர்கள் சிலர், ஏற்கெனவே பதவி விலகியுள்ளனர். அந்த அடிப்படையில் நரசிம்மன் பதவி விலகினால், அவருக்கு பதிலாக சதாசிவம் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவர் எம்.என்.கிருஷ்ணமணி, முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி ஆகியோரையும் ஆளுநராகவோ அல்லது வேறு முக்கிய பதவிகளிலோ நியமிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.