பிர்பும் வன்முறையில் கைதானவர் காவலில் மரணம்: சிபிஐ அதிகாரிகள் மீது மேற்கு வங்க அரசு வழக்கு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் சிபிஐ காவலில் மரணம் அடைந்தது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மீது மாநில காவல்துறை கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பும் அருகே போக்டுய் கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கருதப்படும் முக்கிய நபர்களில் ஒருவர் லாலன் ஷேக். சிபிஐ காவலில் இருந்த இவர், கடந்த திங்கள்கிழமை அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் சிபிஐ அலுவலகத்தின் கழிவறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். லாலன் ஷேக் தற்கொலை செய்து கொண்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதுதொடர்பாக லாலன் ஷேக்கின் மனைவி ரேஷ்மா பீபி, விசாரணைக்காக சிபிஐ அதிகாரிகள் போக்டுய் கிராமத்திற்கு சென்ற போது தனது கணவரை கொன்று விடுவதாக மிரட்டியதாக குற்றம்சாட்டி ராம்பூர்ஹட் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக ஏற்கெனவே மாநில காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கி இருந்த நிலையில், தற்போது குற்றம்சாட்டப்பட்டவரின் மரணம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள முதல்தகவல் அறிக்கையில் மூத்த சிபிஐ அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதனை எதிர்த்து சிபிஐ கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிர்பும் கலவரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டிருந்த லாலன் ஷேக் டிச. 4ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பிர்பும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சிபிஐ-ன் தற்காலிக அலுவலகத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

முன்னதாக, மேற்கு வங்க மாநிலம் பிர்பும் அருகே கடந்த மார்ச் மாதம் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து துணைத் தலைவர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in