

காலாவதியான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் சிறை தண்டனை விதிக்கப்படாது. குறைந்தபட்சம் ரூ.10,000 அபராதம் அல்லது கைப்பற்றப்பட்ட தொகைக்கு 5 மடங்கு அபராதம் வசூலிக்கப்படும் என்று அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்க பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். காலாவதியான பழைய நோட்டுகளுக்கு பதிலாக வங்கிகளில் புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றிக் கொடுக்கப் பட்டன.
சில வாரங்களுக்குப் பிறகு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுப்பது நிறுத்தப்பட்டது. காலாவதியான பணத்தை வங்கிகளில் டெபாசிட் மட்டுமே செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்தது. அதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.
மத்திய அரசின் அறிவிப்பால் சுமார் ரூ.15.4 லட்சம் கோடி மதிப்பி லான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாதவையாகி உள்ளன. இதில் இதுவரை ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டும், மாற்றியும் கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய அவசர சட்டம்
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பதை தண்டனைக் குரிய குற்றமாகக் கருதும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டது.
அந்த அவசர சட்டத்தின்படி 10-க்கும் மேற்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போருக்கு 4 ஆண்டுகள் சிறை, கைப்பற்றப்பட்ட பணத்தின் மதிப்பில் 10 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. அந்த அவசர சட்டத்தில் சிறை தண்டனையை நீக்கி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சிறை தண்டனை இல்லை
இதுதொடர்பாக அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பது குற்றமாகக் கருதப்படும். எனினும் இந்த குற்றத்துக்கு சிறை தண்டனை விதிக்கப்படாது. குறைந்தபட்சம் 10 ஆயிரம் அபராதம் அல்லது கைப்பற்றப்பட்ட தொகைக்கு 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
அவசர சட்டத்தின்படி தனிநபர்கள் 10 பழைய நோட்டு களையும் ஆராய்ச்சியாளர்கள் 25 பழைய நோட்டுகளையும் வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தால் மட்டுமே குற்றமாகக் கருதப்படும்.
பழைய நோட்டுகளை வைத் திருப்போர் வரும் மார்ச் 31-ம் தேதி வரை ரிசர்வ் வங்கியின் கிளைகளை அணுகலாம். வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள், எல்லைகளில் பணியாற்றும் ராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன்களை கருத்திற் கொண்டு இந்தச் சலுகை அளிக்கப்பட்டுள் ளது. எனினும் ரிசர்வ் வங்கியில் தவறான தகவல்களை அளித்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது மொத்த தொகையில் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
மத்திய அரசின் அவசர சட்டம் குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்கு அனுப்பப் பட்டுள்ளது. அவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்த பிறகே அவசர சட்டத்தின் முழு விவரமும் தெரியவரும்.
புதிய அவசர சட்டம் டிசம்பர் 31 முதல் அமலுக்கு வரும். அந்த அவசர சட்டத்துக்கு 6 மாதங் களுக்குள் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.
இவ்வாறு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பணத் தட்டுப்பாடு தீரும்
மத்திய நிதித்துறை இணை யமைச்சர் சந்தோஷ் கங்வார் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அரசு அச்சகங்களில் முன்கூட்டியே புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருந்தால் பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்த தகவல் கசிந்திருக்கும். அதை தவிர்க்கவே முன்கூட்டியே புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படவில்லை. நவம்பர் 10-ம் தேதிக்குப் பிறகே புதிய 500 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க தொடங்கினோம்.
தற்போது நாளொன்றுக்கு 30 கோடி எண்ணிக்கையில் புதிய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் அச்சிடப்படுகின்றன. நாசிக், தேவாஸ், சல்போனி, மைசூரு அரசு அச்சகங்களில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அச்சகங்களின் ஊழியர்கள் இரவு, பகலாக கூடுதல் நேரம் பணியாற்றி வருகின்றனர். எனவே விரைவில் பணத் தட்டுப்பாடு தீரும். ஜனவரி 1-ம் தேதிக்குப் பிறகு பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகளுக்கும் அவசியம் இருக்காது என்று கருதுகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.