Published : 07 Dec 2016 09:11 PM
Last Updated : 07 Dec 2016 09:11 PM

‘என்னை மரண வியாபாரி என்றழைத்த சோ’- பிரதமர் மோடி நினைவுப் பகிர்வு

மூத்த பத்திரிகையாளரும், தேர்ந்த அரசியல் விமர்சகரும், மாநிலங்களவை முன்னாள் எம்பியுமான சோ ராமசாமி ஒரு விழாவில் தன்னை, மரண வியாபாரி என அழைத்து அறிமுகம் செய்துவைத்த அனுபவத்தை பிரதமர் நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றி அனைவரையும் பார்க்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார். சோவின் பேச்சுத்திறனை வெளிப்படுத்தும் இவ்வீடியோவை சமூக வலை தளங்களில் பலரும் பகிர்ந்து கொண்டனர்.

சோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக சோ குறித்த தகவல்களை பதிவிட்டார். ‘பன்முகத் திறமை வாய்ந்தவர், உன்னதமான அறிவு ஜீவி, மிகச் சிறந்த தேசியவாதி, யாருக்கும் அஞ்சாமல் துணிச்சலாக கருத்து கூறுபவர், மரியாதைக்குரியவர், அபிமானத்துக்கு உரியவர்’ என பலவிதமாக சோவை பிரதமர் மோடி புகழ்ந்தார்.

அதோடு, ‘மகா துணிச்சல்காரரான சோ என்னை மரண வியாபாரி என அறிமுகப்படுத்தி வைத்தார்’ எனக் கூறி, வீடியோ இணைப்பு ஒன்றையும் இணைத்து, அனைவரும் பாருங்கள் என, பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

குஜராத் கலவரங்களோடு மோடியை தொடர்புபடுத்தி அவரை, மரண வியாபாரி என, காங்கிரஸ் தலைவர் சோனியா முந்தைய காலங்களில் விமர்சித்தார். எனினும், குஜராத் முதல்வராக 3-வது முறை மோடி பொறுப்பேற்ற போது, நடந்த விழா ஒன்றில் சோ கலந்துகொண்டு பேசினார்.

அப்போது சோனியாவை நையாண்டி செய்யும் வகையில், மோடியை சுட்டிக்காட்டி, ‘இப்போது நான் மரண வியாபாரியை மேடைக்கு அழைக்கிறேன்’ எனக் கூறி சற்று இடைவெளி விட்டு,

‘அதாவது, தீவிரவாதத்துக்கு சாவு மணி அடிப்பவர், ஊழலுக்கு எதிரான மரண வியாபாரி, திறமையற்ற அரசு நிர்வாகத்துக்கு, அதிகாரிகளின் பொறுப்பற்ற மெத்தனத்துக்கு, வறுமைக்கு, அறியாமைக்கு, இருள் மற்றும் இயலாமைக்கு மரணத்தை அளிக்கும் வியாபாரி’ எனக் கூறி, சோனியாவின் குற்றச்சாட்டை புகழாரமாக மாற்றினார் சோ.

இதற்கு பதில் அளித்த மோடி, 1975-77 அவசரநிலை அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து நான் ராமசாமிக்கு ரசிகன். சோ உண்மையான ஜனநாயகவாதி. என் தமிழக நண்பர்கள் அவரை ராஜகுரு என்பார்கள். 3-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்கும் எவரும், ஏற்கெனவே செய்ததை தொடர்ந்தால் போதும் என நினைப்பார்கள். ஆனால், சோவின் பேச்சைக் கேட்டபிறகு என்னால் ஓய்வெடுக்க முடியாது எனத் தோன்றுகிறது’ என்றார்.

சோ அளவுக்கு எனக்கு நாவன்மை இல்லை என்றாலும் என்னால் முடிந்த வரை அவருக்கு பதில் உரைத்தேன் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x