Published : 09 Jul 2014 06:28 PM
Last Updated : 09 Jul 2014 06:28 PM

விலைவாசி உயர்வு: மக்களவையில் அரசு மீது எதிர்க்கட்சிகள் சரமாரி தாக்கு

விலைவாசி உயர்வு பிரச்சினையில், பாஜக தலைமையிலான அரசு மீது மக்களவையில் எதிர்க்கட்சியினர் சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

குறிப்பாக, "இனிவரும் நாட்கள் நல்லதாகவே இருக்கும்" என்ற மோடியின் தேர்தல் பிரச்சார கோஷம் குறித்து காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

மக்களவையில் இன்று (புதன்கிழமை) மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, 2013-14 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பே விலைவாசி உயர்வு பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சியினர் அவையில் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.

இதனால், பொருளாதார அறிக்கையை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி எதிர்க்கட்சியினரின் கடும் அமளி துமளிகளுக்கு நடுவே தாக்கல் செய்தார்.

விலைவாசி உயர்வு பிரச்சினை தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதி மறுத்த சபாநாயகர் சுமித்ரா மகாஜன், இப்பிரச்சினை தொடர்பாக பொது விவாதத்துக்கு சம்மதம் தெரிவித்தார்.

அப்போது, " 'நாட்டு மக்களுக்கு இனிவரும் நாட்கள் நல்லதாகவே இருக்கும்' என்று கூறி, வாக்குகளை பெற்றீர்களே... தற்போது விலைவாசி உயர்வால் மக்கள் தினமும் அவதிப்படுகிறார்களே" என்று எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.

"மத்திய நிதிமைச்சர் அருண் ஜேட்லியோ, விலைவாசி கட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருவது எந்த வகையில் ஏற்புடையது?" என்று காங்கிரஸ் உறுப்பினர்களால் அடுத்தடுத்து கேள்விகள் எழுப்பப்பட்டது.

காங்கிரஸ் உறுப்பினர் அமரிந்தர் சிங் பேசும்போது, "தற்போது விவசாயிகள் தங்களது வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை மிகக் குறைந்த விலையில் வெளிச்சந்தைக்கு விற்று வருகின்றனர். பதுக்கல் அதிக அளவில் நடைபெற ஆரம்பித்துவிட்டது. அதற்காக என்ன நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள்?

பதுக்கல்காரர்களால் அத்தியாவசிய பொருட்களின் விலை 250 சதவீதம் அதிகரித்துள்ளது. இடைத்தரகர்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?" என்றார் சிங்.

அதற்கு பதிலளித்த பாஜக உறுப்பினர் அனுராக் தாக்கூர், "தற்போது உள்ள விலைவாசி ஏற்றம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தவறான கொள்கைகளால் ஏற்பட்ட பாதிப்புதான். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது விலைவாசியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைவிட, நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.கருணாகரன், விலைவாசி பிரச்சினையில் மோடி அரசை குற்றம்சாட்டிய காங்கிரஸ் உறுப்பினர்களைப் பார்த்துக் கடுமையாக சாடிப் பேசினார்.

"கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் அரசு எடுக்காதது ஏன்? விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நீங்கள் (காங்கிரஸ்) உறுதியான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்சினையை காதுகொடுத்துகூட நீங்கள் கேட்கத் தயாராக இல்லை" என்றார் கருணாகரன்.

பாஜக அரசுக்கு கேள்வி எழுப்பிய அவர், "மக்களவைத் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளின்படி, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்படுமா?" என்றார்.

அதைத் தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அமரிந்தர் சிங், "மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. வெங்காய விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், அரசு தொடர்ந்து காய்கறிகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதற்கு முழுமையான தடை விதிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x