வடகிழக்கு மாநிலங்களை முழுவதுமாக புறக்கணிக்கிறது மத்திய அரசு: மம்தா குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி | கோப்புப்படம்
மம்தா பானர்ஜி | கோப்புப்படம்
Updated on
1 min read

சில்லாங்: மத்தியில் ஆளும் பாஜக அரசு மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டதாக மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளர்.

மேகாலயாவில் நடந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மேகாலயா மாநிலம் அதன் மண்ணின் மைந்தர்களாலேயே ஆளப்பட்ட வேண்டும். அதற்கு உதவ திரிணாமூல் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது. நாம் வடகிழக்கு மாநிலங்களில் மாற்றங்களை கொண்டு வந்து வளப்படுத்துவோம்.

மேகாலயாவில் பெண்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர். மாநில அரசும் அவர்களை புறக்கணித்துவிட்டது. திரிணாமூல் காங்கிரஸ் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. அதற்காக மேகாலயாவின் ஒவ்வொரு இல்லத்தை நிர்வகிக்கும் பெண்கள் கணக்குகளிலும் மாதம் ரூ.1000 நேரடியாக செலுத்தும்” என்று அவர் பேசினார்.

முன்னதாக, அசாம் - மேகாலயா எல்லைப் பகுதியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட குடும்பத்தினரைச் சந்தித்த திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கினார். அதுகுறித்து பேசிய அவர், "இன்று நான் முக்ரோ துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை இன்று சந்தித்தேன். அவர்களின் துயரத்தில் பங்கெடுப்பது எனது கடமை. அவர்களுக்கு சிறு உதவியாக இருக்கும் வகையில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினேன்" என்றார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in